Skip to main content

இதைத் தடை செய்ய வேண்டும்... ஆஸி. முன்னாள் கேப்டன் இயான் சேப்பல் அதிருப்தி!

Published on 01/12/2020 | Edited on 01/12/2020

 

Glenn Maxwell

 

 

‘ஸ்விட்ச் ஹிட்' வகை ஷாட்கள் விளையாடுவதற்குத் தடை விதிக்க வேண்டுமென ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டனான இயான் சேப்பல் தெரிவித்துள்ளார்.

 

ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 3 ஒருநாள், 3 இருபது ஓவர், 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. முதற்கட்டமாக நடந்துவரும் ஒருநாள் தொடரில், தொடர்ச்சியாக இரு வெற்றிகளைப் பெற்ற ஆஸ்திரேலிய அணி மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை அதிரடியாகக் கைப்பற்றியது. இரு போட்டிகளிலும் ஆஸ்திரேலியா வீரரான மேக்ஸ்வெல் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் வெற்றியில் முக்கிய பங்காற்றினார்.

 

ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டனான இயான் சேப்பல் இரு அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் தொடர் குறித்துப் பேசுகையில், "ஆஸ்திரேலிய அணியின் பேட்டிங் அற்புதமாக உள்ளது. அவர்கள் இத்தொடரை எளிமைப்படுத்தியுள்ளனர். குறிப்பாக மேக்ஸ்வெல் மற்றும் ஸ்மித் விளையாடுகிற சில ஷாட்கள் நம்பமுடியாத வகையில் உள்ளது. அந்த ஷாட்களை விளையாட நிறைய திறமை வேண்டும். ஆனால், இது சரியானதாகத் தெரியவில்லை. விளையாட்டு யாருக்கும் சார்பாக இருக்கக்கூடாது. எந்தப் பக்கம் இருந்து பந்துவீச போகிறேன் என்று நடுவரிடம் பவுலர் கூறுகிறார். பேட்ஸ்மேன் வலக்கை வீரராக உள்ளார். அணி கேப்டன் அதற்கு ஏற்றாற்போல ஃபீல்டிங்கில் வீரர்களை நிறுத்துகிறார். பவுலர் பந்துவீசும்போது பேட்ஸ்மேன் இடக்கை வீரராக மாறிவிடுகிறார். ஒருவர் இதில் கைதேர்ந்தவர் என்றால் இதை செய்யலாம். அதில் எனக்கு எந்தப் பிரச்சனையுமில்லை. வெளிப்படையாக இது தவறு எனத் தெரியும்போது எனக்கு எரிச்சலூட்டுகிறது. பேட்ஸ்மேன் தனது நிலையை மாற்றி இது போன்று விளையாடினால் அது விதிகளுக்கு புறம்பானது என்று அறிவிக்க வேண்டும்" எனக் கூறினார்.