Skip to main content

“கொரோனா கற்றுத்தந்த மூன்று விசயங்கள்” - தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திரா பகிரும் சுவாரசியம்

Published on 13/12/2022 | Edited on 14/12/2022

 

 Success Secret shared by Anand Mahindra

 

இந்தியத் தொழில் அதிபர்களில் முக்கியமானவர் ஆனந்த் மஹிந்திரா. மோட்டார் உற்பத்தி துறையில் இவரது வளர்ச்சி அபாரமானது. எங்கேயாவது வித்தியாசமான கண்டுபிடிப்புகள் பயன்பாட்டில் இருப்பது அவருக்குத் தெரியவரும் பட்சத்தில் அதை ட்விட்டரில் பகிர்ந்து மனம் திறந்து பாராட்டுவார். 

 

எடுத்துக்காட்டாக தண்ணீர் குடங்களை எடுத்துச் செல்வதற்காக ஒரு டிராலி வண்டியை பைக் உடன் இணைத்து ஓட்டிய இளைஞரையும் அவரது செயலையும் பாராட்டினார். அதற்குப் பிறகு அதை பொதுப் பயன்பாட்டிற்காக பலர் மாற்றிக் கொண்டனர்.

 

ஆஸ்திரேலிய அணியை வீழ்த்திய இந்திய கிரிக்கெட் அணியில் விளையாடிய இளம் விளையாட்டு வீரர்கள் ஆறு பேருக்கு தன் சொந்த செலவில் கார் பரிசளித்தார். அதில் நமது தமிழக வீரர் நடராஜனும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

விளையாட்டு, இசை, உணவு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு எனப் பல்வேறு துறைகள் குறித்த மாற்று சிந்தனைகளோடு இவர் பகிர்ந்து கொள்கிற ட்வீட்கள் ட்விட்டரில் எப்போதும் ட்ரெண்டிங்கில் இருப்பவை. 

 

கொரோனா காலகட்டத்தில் என்னுடைய ரிசார்ட்டுகளை நான் இலவசமாகத் தருகிறேன் அதை சிகிச்சை மையமாக மாற்றிக்கொள்ளுங்கள் என்றவர். 

 

எப்போதுமே புதியவைகளை கண்டறிந்து வியப்பவர். தான் கற்றுக்கொண்டவற்றை பிறரோடு பகிர்ந்து கொள்பவர். அந்த வகையில் கொரோனா ஊரடங்கு காலத்தில் தான் கற்றுக் கொண்ட மூன்று விசயங்கள் எனப் பகிர்ந்துள்ளார். அவற்றை பின்வருமாறு பார்ப்போம்.

 

ஆனந்த் மஹிந்திரா கற்றுக்கொண்ட மூன்று விசயங்கள்

 

நன்றியுணர்வு 

என் வாழ்வின் தொடக்க நாளில் எதற்கெல்லாம் நான் நன்றியோடு இருக்க வேண்டும் என்று எழுதுவேன். நேற்று எதெல்லாம் எனக்குக் கிடைத்ததோ அதற்காக மறுநாளில் அதற்கு நன்றி என்று எழுதி வைப்பேன்.

 

ஆரோக்கியமான உடல்நலம், படுத்துறங்க நல்ல படுக்கையறை, எனது மேஜையில் சுவையான உணவு, என் தலைக்கு மேல் ஒரு கூரை, என்னை நேசிக்கும் மக்கள் மத்தியில் இருப்பது போன்றவை எனக்குக் கிடைத்ததற்கு நான் நன்றியுணர்வு கொண்டவனாய் இருப்பேன் என எழுதுவேன். அந்த நன்றியுணர்வு எப்போதும் இருக்க வேண்டும் என்பது நான் முதலாவதாகக் கற்றுக் கொண்டது. கொரோனா காலகட்டத்தில் இந்தப் பட்டியல் பல மடங்கு பெருகியது.

 

மீண்டு வருதல் 

ஒரே நாளில் எல்லாம் மாறிப்போனது; ஆனாலும் நாம் எதிர்த்து நின்றோம். பள்ளிகள் மூடப்பட்டது; ஆனாலும் அதிலிருந்து மீள என்ன செய்ய வேண்டுமென யோசித்தோம். ஆன்லைன் வழியாக படித்தோம், தேர்வுகளை இணையதள உதவியுடன் எழுதினோம். கஷ்டமான தொழில்நுட்பத்தையும் உடனடியாகத் தெரிந்துகொண்டு நாம் அதனைப் பயன்படுத்தப் பழகினோம். வாழ்க்கை மேலும் கீழுமாக நம்மை நகர்த்திப் போட்ட போதும் நாம் மீண்டு வந்தோம். இப்படியாக எல்லா சூழலிலும் நாம் வீழ்ந்து விடாமல் மீண்டு வர வேண்டுமென இரண்டாவதாகக் கற்றுக் கொண்டேன்.

 

அடையாளம் காண்பது 

நமது நலன் மற்றவர்களுக்கு எந்த விதத்தில் பயன்படுகிறது என்பதையும் கவனிக்க வேண்டும். பலரோ வீடுகளை சுத்தப்படுத்திக் கொண்டும், சமைத்துக் கொண்டும், குப்பைகளைச் சேகரித்துக் கொண்டும், கார் ஓட்டிக் கொண்டும், உடல்நலத்தைக் கவனித்துக் கொண்டும் இருந்தோம். ஆனால் பல மாநில மக்களோ நெடுஞ்சாலைகளில் செருப்பு கூட இல்லாமலும் உணவின்றி, நீரின்றி நடப்பதைப் பார்த்தோம். அவர்களையெல்லாம் காணும்போது நாம் எப்படியான வாழ்வினை வாழ்கிறோம் என அடையாளம் கண்டுகொண்டேன். அந்த அடையாளத்தை தக்க வைத்துக்கொள்ள என்னவெல்லாம் செய்ய வேண்டுமென நினைத்து அதற்காக உழைக்க ஆரம்பித்தேன். இது நாம் வாழ்கிற வாழ்விற்கான அர்த்தப்படுத்துதலைத் தருகிறது.

 

இவ்வாறு மூன்று விசயங்களை ஆனந்த் மஹிந்திரா பகிர்ந்துகொள்கிறார்.