Skip to main content

கண் முன்னே ஆடிய தெய்வங்கள்!- பரதநாட்டிய பரவசம்!!

Published on 16/07/2019 | Edited on 16/07/2019

 

சிவகாசியில் காலண்டர் தயாரிக்கும் நிறுவனம் நடத்தி வருபவர் நண்பர் ஜெயபிரகாஷ். மதுரைக்கு ரயிலில் சென்ற போது அவரைச் சந்திக்க நேர்ந்தது. கவர் ஒன்று அனுப்ப வேண்டும் என்று முகவரியைக் கேட்டுப் பெற்றார். இரண்டு நாட்கள் கழித்து வந்த பெரிய கவரில் அவருடைய மகள் ஐஸ்வர்ய லட்சுமியின் பரதநாட்டிய அரங்கேற்ற அழைப்பிதழ் இருந்தது.  நித்யாஞ்சலி வழங்கும் நிருத்த லக்‌ஷனா பரத நாட்டிய அரங்கேற்றம் என முகப்பில் குறிப்பிடப்பட்டிருந்த அந்த  அழைப்பிதழும் சரி, நிகழ்ச்சி நிரலும் சரி, முழுவதும் ஆங்கிலத்திலேயே இருந்தன.   

 

 Parathanatyam Excursion

 


 
தொழில் நகரமான சிவகாசியில், எந்நேரமும் வியாபார சிந்தனையோடு இருக்கும் அந்த நண்பர்,  தன் மகளைப் பரதநாட்டியம் பயில வைத்து, அரங்கேற்றமும் செய்கிறார் என்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. ஐஸ்வர்ய  லட்சுமியை அர்ப்பணிப்புமிக்க சிஷ்யையாக 9 வருடங்கள் இருந்தவர் என்றும், அவரோடு இணைந்து ஆடும் நந்தினியை, தன்னிடம் 6 வருடங்கள் பயிற்சி பெற்றவர் என்றும் குருவான நிரஞ்சனா அய்யன் கோடீஸ்வரன், அவ்வழைப்பிதழில் பெருமிதத்துடன் குறிப்பிட்டிருந்தார்.   

 

 

 Parathanatyam Excursion

 


 

சிவகாசி ஜா போஸ் காஞ்சனா கல்யாண மண்டப அரங்கில், சரியாக மாலை 5.30 மணிக்குத் துவங்கியது அரங்கேற்றம். பரதநாட்டியத்தின் முக்கிய அம்சங்கள் என்று சொல்லப்படும் புஷ்பாஞ்சலி, அலாரிப்பு, ஜதீஸ்வரம், வர்ணம், டோலாயாம், ஆடிக் கொண்டார், தில்லானா போன்ற உருப்படிகளுக்கு அபிநயித்து ஆடினார்கள் இருவரும். முகத்தில் ஆர்வமும் சுறுசுறுப்பும் பிரதிபலித்தன.

 

பாத அடிகளை எடுத்து வைத்த பாங்கு, அங்க அசைவுகளின் நேர்த்தி, நடனத்திற்கும் இசைக்கும் காட்டிய முகபாவம், தோற்றத்தை மெருகூட்டிய ஒப்பனை, நிறத்தை மேம்படுத்திய உடைகள், தாளம் பிசகாது ஒலித்த நட்டுவாங்கம், இசைப்பிரவாகம் என அத்தனை அம்சங்களும் இந்நிகழ்ச்சியில் சிறப்பாக வெளிப்பட்டன. பரத நாட்டிய அரங்கேற்றத்தின் முழு வெற்றிக்கும் காரணமானவர் குரு என்று மேடையில் சிலாகிக்கப்பட்டார் நிரஞ்சனா.  

 

 Parathanatyam Excursion

 

 
பரதக்கலை என்னும் பெருங்கடலில் நீந்தி முத்தெடுத்ததாக நடனமாடிய இருவரையும் பாராட்டினார் சிறப்பு விருந்தினர்  ‘சோனி’ கணேசன்.  “சென்னையில் எத்தனையோ அரங்கேற்ற நிகழ்ச்சிகளைப் பார்த்திருக்கிறேன். சிவகாசியில் இப்படி ஒரு நிகழ்ச்சியா? இரண்டு மணி நேரம் நம்மை மறந்திருந்தோம்.” என்று வியந்தார் ஓய்வு பெற்ற வங்கி அதிகாரியான அழகப்பன். “தவமாய் தவமிருந்தால் தான் அரங்கேற்றம் பண்ண முடியும்.” என்று உணர்ந்து மெச்சினார் சுபபிரியா பிரபாகரன்.

 

தவம் என்பது சாதாரண வார்த்தையா? அப்படியென்றால், பரதநாட்டியம் வெகு சிறப்பு வாய்ந்தது அல்லவா? ஆம். மனதையும் உடலையும் செம்மைப்படுத்தக்கூடிய கலைகளில் நடனக்கலை தலையாயது. சோர்வுற்ற உள்ளங்களைத் தட்டியெழுப்பி மனநிறைவை ஏற்படுத்துகிறது பரதம் என்றால் மிகையல்ல. இது ஒரு தெய்வீகக் கலை என்று போற்றப்படுகிறது. அதனால் தான், சிவனுக்கு  நடராஜ வடிவம் தந்து ஆடும் தெய்வமாக வணங்கி வருகிறோம்.  

 

 Parathanatyam Excursion


 
பரதநாட்டிய அரங்கேற்றம் என்பது கலைப்பயணத்தின் முதல் படி. மாதவியின் நடன அரங்கேற்றம் குறித்து, இரண்டாம் நூற்றாண்டில் எழுதப்பட்ட சிலப்பதிகாரத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. பதினொரு வகை ஆடல், பாடல், அழகு ஆகிய மூன்றிலும் சிறந்தவள் மாதவி என்றும், தனது 12- வது வயதில் சோழ மன்னன் திருமாவளவன் முன்னிலையில் அரங்கேறி, ‘ஆடற் செல்வி’ என்று அங்கீகரிக்கப்பட்டதை அரங்கேற்று காதையில்  பாடியிருக்கிறார் இளங்கோவடிகள்.

 

புராணவியல் படி பரத முனிவரால் உருவாக்கப்பட்டதே பரதம் என்று சொல்லப்பட்டாலும், 2000 ஆண்டுகளுக்கு முன்பே இக்கலை வடிவம் தமிழகத்தில் உருவானது.

 

 Parathanatyam Excursion

 

கூத்து, ஆடல், நாட்டியம், தாசி ஆட்டம், சின்னமேளம், சதிர் என இக்கலை வடிவத்துக்குப் பல பெயர்கள் உண்டு. கடந்த எழுபது ஆண்டுகளாகத்தான் பரத நாட்டியம் என்ற பெயரில் அழைக்கப்படுகிறது. சதிராட்டம் என்ற தமிழர் நடனத்திற்கு பரதநாட்டியம் என்று பெயரிட்டு பலரும் பரவலாகப் பயில்வதற்கு முனைப்புடன் செயல்பட்டார் என, மதுரையில் பிறந்த புகழ்பெற்ற நடனக் கலைஞரும், சென்னையில் கலாஷேத்ரா என்ற நடனப் பள்ளியை நிறுவியருமான ருக்மிணி தேவி அருண்டேலை வரலாறு பதிவு செய்திருக்கிறது.

 

ஆடல் கலையே தேவன் தந்தது; தேவனின் ஆடலில்தான் ஜீவன் வந்தது! என, பரதநாட்டியம் எனப்படும் தெய்வீகக்கலை போற்றுதலுக்குரியதாக உலகமெங்கும் வியாபித்துள்ளது.    

 

 படங்கள் : லைட்ஸ் ஆன், திருச்சி