Skip to main content

ஊதியமே தேவையில்லை , டம்ளரை கீழே வையுங்கள்...

Published on 08/02/2019 | Edited on 09/02/2019

பிரச்சனை வராமல் இருந்தால் அது மனித வாழ்க்கை முழுமை ஆனதாக இருக்காது.ஆனால் பிரச்சனையை சுமந்து கொண்டே திரிந்தால் அது மனித வாழ்க்கையை முழுமை அடையவே விடாது.தனக்கு ஏற்பட்ட சங்கடத்தை, இன்னலை ஒவ்வொருவரிடமாக சொல்லிக் கொண்டே இருப்பார்கள். அதுவும் ஒரே நாளில் அதை சொல்லி முடிப்பதும் கிடையாது. பல நாட்களாக அந்தக் கதை ஓடிக் கொண்டே இருக்கும்.இவ்வாறு அந்தப் பிரச்சனையில் தொங்கிக் கொண்டே இருப்பதால் அதற்கு நல்ல தீர்வு கிடைத்துவிடுமா?அப்புறம் ஏன் அதைப்பிடித்துத் தொங்கிக் கொண்டே இருக்க வேண்டும்? தைவிடவும் பிரச்சனையை எவ்வாறு தீர்ப்பது என்பது குறித்து யோசனை கேட்டாலும் பிரயோஜனமாக இருக்கும்.பலரும் இந்த எளிய உண்மையைப் புரிந்து கொள்ளாமல் மற்றவர்களையும் சங்கடப்படுத்திக் கொண்டே இருப்பார்கள். இங்கே பிரபல விஞ்ஞானி ஜகதீஷ் சந்திரபோஸின் வாழ்வில் அவருக்கு ஏற்பட்ட ஒரு பிரச்சனையை அவர் எவ்வாறு எதிர்கொண்டார் என்பதைப் பார்க்கலாம்.
 

teacher confident speech

கொல்கத்தா பிரசிடென்சி கல்லூரியில் பேராசிரியராகப் பணியாற்றினார் சந்திரபோஸ். அப்போது அங்கு பணியாற்றிய ஆங்கிலேயப் பேராசிரியர்களுக்கு எந்தவகையிலும் குறைவில்லாத வகையில் சிறப்பான திறமை பெற்றிருந்தார் அவர்.ஆனாலும் பிரிட்டிஷ் ஆட்சி நடந்து கொண்டிருந்ததால் ஆங்கிலேயர்களுக்கு வழங்கப்படும் சம்பளத்தில் பாதிதான் இந்தியர்களுக்கு வழங்கப்பட்டு வந்தது.அப்படித்தான் ஜகதீஷ் சந்திரபோஸ் இந்தியர் என்ற காரணத்தால் குறைவான சம்பளம் வழங்கப்பட்டது. இது அவருக்கு உறுத்தலாக அமைந்தது. இதற்காகப் பலரிடமும் பிரச்சனையைப் பற்றிக் குமுறிக் குமுறி கொந்தளிப்பதை அவர் விரும்பவில்லை. மாறாக பிரச்சனையைத் தைரியமாக எதிர்க்கத் தீர்மானித்தார்.‘ஊதியமே தேவையில்லை’ என்று திட்டவட்டமாகக் கூறி தொடர்ந்து பணியாற்றினார். இவ்வாறு தொடர்ந்து மூன்று ஆண்டுகள் பணிபுரிந்தார் ஜகதீஷ் சந்திரபோஸ்.இவரது நேர்மையையும், திறமையையும் பார்த்த ஆங்கிலேய அரசு அதன்பின்னர் ஆங்கிலேயர்களுக்கு இணையான சம்பளத்தை வழங்க முடிவு செய்தது. அத்துடன் மூன்று ஆண்டு நிலுவைத் தொகையையும் சேர்த்து அவருக்கு வழங்கியது.பிரச்சனையைக் காந்தீய வழியில் எதிர்கொண்டார் அவர்.ஒவ்வொருவரும் தாங்கள் எதிர்கொள்ளும் பிரச்சனையைப் பற்றிப் புலம்பிக் கொண்டிருக்காமல் அதனைத் தீர்ப்பதற்கான வழிமுறைகளில் தைரியமாக ஈடுபட வேண்டும்.எந்தவொரு பிரச்சனையைப் பற்றியும் பிறரிடம் சொல்லிக் கொண்டே இருந்தால் மனதிற்கு வேண்டுமானால் அப்போதைக்கு ஆறுதலாக இருக்குமே தவிர, பிரச்சனைக்கு நல்ல தீர்வு கிடைக்காது.

ஒருநாள் வகுப்பறையில் கண்ணாடி டம்ளர் ஒன்றைக் கையில் எடுத்த ஆசிரியர், ‘இது எவ்வளவு எடை இருக்கும்?’ என்று மாணவர்களிடம் கேட்டார்.ஒவ்வொருவரும் ஒவ்வொரு எடையைச் சொன்னார்கள்.‘‘உண்மையிலேயே இதன் எடை எனக்கும் தெரியாது. இந்தக் கண்ணாடியைக் கையில் பிடித்துக் கொண்டே இருந்தால் என்ன ஆகும்?’’ என்று கேட்டார்.‘‘ஒன்றும் ஆகாது சார்’’ என்று கோரஸாகப் பதில் வந்தது.ஒரு மணி நேரம் தொடர்ந்து பிடித்துக் கொண்டே இருந்தால்? ,உங்கள் கை வலிக்கும் சார்’’,‘‘நாள் முழுக்க அப்படியே பிடித்துக் கொண்டிருந்தால்? உங்கள் கை மரத்துப் போகும் சார் , ஒரு மணி நேரத்தில் வலிக்கும் கை, ஒரு நாள் சென்றால் மரத்துப் போகும் என்றால் இந்த டம்ளரின் எடை அதிகரித்துக் கொண்டே இருக்குமா?’’ என்று கேட்டார் ஆசிரியர்.இதற்குப் பதில் சொல்லத் தெரியாமல் மாணவர்கள் விழித்தனர்.‘‘சரி விடுங்கள். என் கை மரத்துப் போகாமல் இருக்க வேண்டும் என்றால் நான் என்ன செய்ய வேண்டும்?, டம்ளரைக் கீழே வைத்துவிட வேண்டும்,சரியாகச் சொன்னீர்கள். இப்போது விஷயத்திற்கு வருகிறேன். இந்த டம்ளரை பிரச்சனை என்று வைத்துக் கொள்ளுங்கள். பிரச்சனை வந்தால் உடனே அதனை நமது தலைக்குள் ஏற்றி சுமக்க ஆரம்பிக்கிறோம். ஒரு மணி நேரம் சுமந்தால் தலை வலிக்க ஆரம்பிக்கும். நாள் முழுவதும் சுமந்தால் தலை மரத்துப் போகும். இரத்த ஓட்டம் தடைப்படுவதால் மூளை செயலிழந்து உடம்பு முழுவதும் மரத்துப் போய்விடும். அவ்வாறு ஏற்படாமல் இருக்க வேண்டும் என்றால் நாம் என்ன செய்ய வேண்டும்?’’ என்று ஆசிரியர் கேட்டார்.‘‘பிரச்சனையைத் தூக்கி எறிந்துவிட வேண்டும்’’ என்றார்கள் மாணவர்கள்.ஆம் பிரச்சனையை சுமந்து கொண்டே திரியாமல் அதனைத் தூக்கி எறிந்துவிட வேண்டும்.