Skip to main content

குழந்தைகளின் கூகுள்

Published on 12/03/2018 | Edited on 13/03/2018

இன்றைய தலைமுறை இணையம் இல்லாமல் இருக்க முடியாது. உலகம் ஓடிக்கொண்டிருக்கும் வேகத்தில் நாமும் சரி, நம் குழந்தைகளும் சரி ஈடுகொடுக்க வேண்டுமென்றால் அதற்கு இணையம் அவசியம். இதில் மாற்றுக்கருத்து இருக்காது. குழந்தைகள் நம்மைவிட அறிவாளிகள் அவர்களின் அறிவை வளர்க்க நாம்தான் உதவி செய்ய வேண்டும். "நீங்க என்ன வேணும்னாலும் சொல்லுவீங்க, குழந்தை பாக்கக் கூடாதத பாத்துருச்சுனா, தப்பா எதாவது வந்துருச்சுனா, இந்த வயசுலேயே பேஸ்புக் பாக்க ஆரம்பிச்சா என்ன பண்றது" என்று  கேட்பவர்களுக்கு, "நாங்க இருக்கோம்" என்று கூகுள் கொண்டுவந்ததுதான் கிடில் (kidle.com). இது பலநாட்களுக்கு முன்பிருந்தே இருந்தாலும், இந்தியாவில்  இதை பரவலாக பயன்படுத்தப்படுவது இல்லை.  

kidle.com

நீங்கள் இதில் தலைகீழாக நின்று தேடினாலும் ஆபாசம் சார்ந்த எதுவும் (sexual contents) பார்க்க முடியாது. பேஸ்புக், ட்விட்டர் போன்ற எந்தவிதமான சமூக ஊடங்களுக்கும், கூகிள், யூடூயூப் போன்ற பிரபலமான பக்கங்களுக்கும் இந்த வலைத்தளத்திலிருந்து செல்ல முடியாது. இதனால் குழந்தைகள் தங்களுக்கு தேவை இல்லாதவற்றை பார்க்க இயலாது. இதில்வரும் விவரங்கள் யாவும் குழந்தைகளுக்கு புரியும் வகையில் வகைப்படுத்தப்பட்டுள்ளது.  கடினமான ஆங்கில வார்த்தைகள் இதில் இல்லாமலும், மிகநீளமாக, பத்தி பத்தியாக இல்லாமல் குழந்தைகள் படிக்கும் அளவிற்கு சுருக்கமாகவும் இதில் தரவுகள் தரப்பட்டுள்ளன. இதனால் குழந்தைகள் தேவையில்லாத, அதிகளவு  கருத்துக்களை தவிர்த்துவிடுகின்றனர்.

குழந்தைகளை தைரியமாக இதில் உலாவ விடலாம் அவர்களுக்கு வேண்டியதை அவர்கள் கற்றுக்கொள்வார்கள். நீங்கள் அருகிலிருக்க வேண்டிய அவசியம் இதில் இல்லை என்றாலும், அவர்களுக்கு அருகில் நீங்கள் இருக்கும்போதுதான் குழந்தைகள் முழுமையாக கற்றுக்கொள்ள முடியும், அவர்களின் சந்தேகங்களை தீர்த்துக்கொள்ள முடியும்.

Next Story

பைக் மீது தீராத காதல்-15 பைக்குகளை திருடிய சிறுவன் கைது

Published on 10/03/2024 | Edited on 10/03/2024
Unrequited love for bikes-17-year-old boy arrested for stealing many bikes

17 வயதில் எண்ணற்ற வண்டிகளை திருடிய சிறுவனை போலீசார் கைது செய்துள்ளனர்.

திருவண்ணாமலை மாவட்டம் வேலையம்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த சின்னையன் மகன் ஆர்யா (பெயர் மாற்றப்பட்டுள்ளது). 17 வயதாகும் ஆர்யா பன்னிரண்டாம் வகுப்பு பள்ளிப் படிப்பை பாதியில் விட்ட சிறுவன் என்றுகூறப்படுகிறது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் மூங்கில்துறைப்பட்டு பகுதிகளில் இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்ட சூர்யா போலீசாரால் கைது செய்யப்பட்டு கடலூர் கூர்நோக்கு இல்லத்தில் சேர்க்கப்பட்டான். சில மாதங்களாக அங்கு இருந்தவன் கடந்த பிப்ரவரி 16ஆம் தேதி கடலூர் கூர்நோக்கு இல்லத்திலிருந்து ரிலீஸ் ஆனான். வெளியே வந்தவன் மீண்டும் பைக் திருட்டில் ஈடுப்பட்டுள்ளான். கடலூர், சங்கராபுரம், திருக்கோவிலூர் ஆகிய பகுதிகளில் மூன்று வண்டிகளையும் திருவண்ணாமலையில் 15 வண்டிகளும்  திருடியதாக தெரிய வருகிறது.

மார்ச் 7 ஆம் தேதி காலை 7 மணி அளவில் குற்றப்பிரிவு ஆய்வாளர் அன்பரசு தலைமையில் திருவண்ணாமலை தண்டராம்பட்டு ரோடு அங்காளம்மன் கோயில் அருகே சந்தேகத்திற்கு இடமான வகையில் சுற்றி திரிந்த நிலையில் அழைத்து விசாரித்த போது, முன்னுக்குப் பின் முரணாக பதிலளித்துள்ளான்.

தொடர் விசாரணையில் பைக் திருடன் என்பது தெரிய வந்த நிலையில் திருவண்ணாமலை குற்றப்பிரிவு காவல்துறையினரால் அதிரடியாக கைது செய்யப்பட்டான். இந்த சிறுவனுக்கு பைக் மீது தீராத காதல் இருந்துள்ளது. திருடிச் செல்லும் பைக்கை விற்பனை செய்யாமல் வீட்டிலேயே பாதுகாப்பாக வைத்துள்ளான். அவன் விருப்பப்படும் போது மட்டும் விரும்பிய பைக்கை எடுத்து ஓட்டிவிட்டு மீண்டும் பாதுகாப்பாக தன் வீட்டிலேயே வைத்துக் கொண்டு இருந்துள்ளான். இந்த தகவலை அவன் சொன்னதும் போலீசார் ஆச்சரியமடைந்துள்ளனர். அவன் திருடிய 15 பைக்குகளை மீட்டு காவல் நிலையத்திற்கு கொண்டுவந்தனர். பைக் திருடு போனதாக புகார் தந்தவர்களை வரவைத்து ஆவணங்களை சரிபார்த்து அந்த பைக் ஒப்படைக்கப்படும் என காவல்துறை தரப்பில் கூறப்படுகிறது.

வழக்கமாக பைக் திருடுபவர்கள் உடனடியாக அதனை வேறு ஒருவருக்கு விற்பதும் இல்லையென்றால் ஸ்பேர் பார்ட்ஸ்களை பார்ட் பார்ட்டாக பிரித்து விற்பதை தான் இதுவரை காவல்துறையினர் கேள்வி பட்டுள்ளனர். ஆனால் பைக் மீது கொண்ட காதலால் விரும்பிய பைக் திருடிக் கொண்டு போய் வீட்டிலேயே பத்திரமாக வைத்து அதை சுத்தம் செய்து பளபளப்பாக வைத்துக் கொண்டிருப்பவனை நினைத்து காவல்துறையினர் ஆச்சரியம் அடைந்துள்ளனர்.

Next Story

சிவராத்திரி விழா; 17 குழந்தைகளுக்கு நேர்ந்த விபரீதம்

Published on 08/03/2024 | Edited on 08/03/2024
Shivaratri festival; Tragedy befell 17 children

ராஜஸ்தான் மாநிலம் கோட்டா அருகில் உள்ள காளிபஸ்தி என்ற இடத்தில் சிவராத்திரி விழா முன்னேற்பாடுகள் நடைபெற்று வந்தன. இதனையொட்டி சிறுவர்கள் கலசத்தில் தண்ணீர் எடுக்கச் சென்றுள்ளனர். அப்போது சிறுவர்கள் எடுத்துச் சென்ற கொடி கட்டிய இரும்புக் குழாய் உயரழுத்த மின்கம்பி மீது உரசியுள்ளது. இதனால் சிறுவர்கள் மீது மின்சாரம் பாய்ந்துள்ளது. இதில் 17 சிறுவர்கள் படுகாயமடைந்தனர். அவர்களை உடனடியாக மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து குழந்தைகளை நாடாளுமன்ற மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்துள்ளார்.

சிவராத்திரியை முன்னிட்டு நடந்த ஊர்வலத்தின் போது மின்சாரம் தாக்கி 17 சிறுவர்கள் படுகாயமடைந்த சம்பவம் ராஜஸ்தானில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து ராஜஸ்தான் அமைச்சர் ஹீரலால் நாகர் கூறுகையில், “ இது மிகவும் வருத்தமளிக்கும் சம்பவம். இரண்டு குழந்தைகள் பலத்த காயம் அடைந்துள்ளனர். ஒருவர் 100% தீக்காயம் அடைந்துள்ளார். அனைத்து விதமான சிகிச்சையும் அளிக்க சிறப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது. அதிகாரிகள் விசாரணை நடத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.

மேலும் கோட்டா போலீஸ் எஸ்.பி. அம்ரிதா துஹான் கூறுகையில், “இது மிகவும் சோகமான சம்பவம். காளிபஸ்தியைச் சேர்ந்த மக்கள் தங்கள் கலசத்துடன் இங்கு கூடியிருந்தனர். ஒரு குழந்தை சுமார் 20 முதல் 22 அடி வரை உயரமுள்ள குழாயை வைத்திருந்தது. இந்த குழாய் உயர் அழுத்த கம்பியை உரசியுள்ளது. அந்த குழந்தையை காப்பாற்ற முயன்ற அங்கு இருந்த குழந்தைகள் அனைவரும் மின்சாரம் தாக்கி படுகாயம் அடைந்தனர். அவர்களுக்கு சிறப்பு முன்னுரிமை அடிப்படையில் முறையான சிகிச்சை அளிக்கப்படுகிறது.  ஒருவர் 100% தீக்காயங்களுடன் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளார். விசாரணை தொடங்கப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தில் யாரேனும் அலட்சியமாக இருந்திருந்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் இது குறித்து தகவல் தெரிவிக்கப்படும்” எனத் தெரிவித்தார்.