Skip to main content

தென்னை இலையா? தென்னை ஓலையா? கவிஞர் மகுடேசுவரன் எழுதும் சொல்லேர் உழவு - பகுதி 17

Published on 16/08/2018 | Edited on 19/09/2018
soller uzhavu

 

 

“நாம் வாழ்கின்ற வாழ்க்கைக்கு இதுவரை அறிந்து வைத்திருக்கின்ற சொற்களே போதும், புதிது புதிதாய்ச் சொற்களை அறிந்துகொள்வதற்கு நாமென்ன புலவரா…? அவற்றால் என்ன பயன் இருக்கப் போகிறது?” என்று பலர்க்கும் தோன்றலாம். நம்முடைய அன்றாடப் பாடுகளுக்கு நாம் பேச்சில் பயன்படுத்துகின்ற சொற்களே போதுமென்று நம்பிக்கொண்டிருக்கிறோம். இன்றைய நகர்ப்புறத்து அடுக்ககம்வாழ் குழந்தைகட்கு அரிசி மண்ணில் விளைகிறது என்னுமளவுக்குக்கூடத் தெரிந்திருக்கவில்லை என்பது அதிர்விக்கும் உண்மை. அரிசியும் பருப்பும் பொட்டணப் பொருள்கள் என்றே நினைக்கின்றன. இல்லாவிட்டால் அரிசி எந்தச் செடியில் விளைகிறது என்று கேட்கும் நிலையில் இருக்கின்றன.

 

அன்றாடச்சொற்கள் போதும் என்னுமளவில் வாழ்ந்த பெற்றோர் தத்தம் குழந்தைகட்குச் சொல்லறிவைப் புகட்டவேயில்லை என்பதுதான் காரணம். இந்தப் போக்கின் வீழ்ச்சியும் விளைவும் நம் குழந்தைகளிடம் வெளிப்படுகின்றன. உரிய சொற்களைத் தெரிந்துகொள்ளாமல்  அவர்கள் வளர்கின்றார்கள். குழந்தைகளின் இயல்பு பெரியவர்களை அப்படியே அடியொற்றுவதுதான். பெரியவர்கள் கூறும் ஒவ்வொரு சொல்லையும் கூர்ந்து கவனித்து உள்வாங்கிக்கொள்வதுதான். அவர்களுக்குக் கிடைக்காத சொற்களை, அவர்களிடம் சொல்லப்படாத சொற்களை அவர்கள் எப்படிப் பெறுவார்கள் ?

 

நகரத்தில் தென்னை மரங்களை வளர்ப்போர் வீடுகளில் வளரும் குழந்தைகள் “தென்னை இலை” என்று சொல்கின்றன. இந்தக் கொடுமையை எங்கே போய்ச் சொல்வது ? தென்னைக்கு இலை இல்லை. ஓலைதான் உண்டு. தென்னை ஓலை என்று சொல்ல வேண்டும். தென்னைக்கும் பனைக்கும் இருப்பவை ஓலைகள். ஓலைக்கும் இலைக்கும் இடையே இருக்கும் வேறுபாடு ஓரெழுத்து மட்டும்தான் என்றா நினைக்கிறீர்கள் ? ஓராயிரம் வேறுபாடுகள் இருக்கின்றன. தென்னை ஓலையில் கிளி அமரும். இலையில் அமருமா ? இலைக்கும் ஓலைக்கும் நடுவில் மாறுபடும் இயல்புகள் இவை. அதனால் ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு பெயர். அதற்குரிய பெயரைக்கொண்டு அழைக்க வேண்டும். மாற்றி அழைத்தால் அறியாமை வெளிப்படும்.

 

மாமரத்திலும் வாழை மரத்திலும் ஆல் அரசிலும் இருப்பவைதாம் இலைகள். தென்னையிலும் பனையிலும் இருப்பவை ஓலைகள். நெல், கேழ்வரகு போன்ற புல்வகைகளில் தண்டினை ஒட்டி வளர்பவை தாள்கள். கரும்புக்கும் சோளத்திற்கும் அவை தோகைகள். கற்றாழைக்கும் தாழைக்கும் மடல்கள். ஆமணக்கு, ஒடுவன் போன்ற செடிகளில் செழித்து வளர்பவை தழைகள். மாவிலை, வேப்பிலையை மாந்தழை, வேப்பந்தழை என்று பேச்சுத் தமிழில் மாற்றிக் கூறுவோரும் உள்ளனர். இலைக்கும் தழைக்கும் பெரிதாய் வேறுபாடில்லை என்று கொள்ளலாமே தவிர, இலைக்கும் ஓலைக்கும் தாளுக்கும் தோகைக்கும் இடையே தோற்றத்திலிருந்து இயல்புகள் வரை பலப்பல வேறுபாடுகள் இருக்கின்றன.

 

ஒரு தென்னை மரத்தின் முன்னால் நின்றபடி அதன் உறுப்புகளைக் கூறச்சொன்னால் கைக்கொள்ளாத அளவுக்குச் சொற்கள் வந்து விழ வேண்டும். தென்னைக்கு ஓலை. ஓலையின் உறுப்பாவது ஈர்க்கு. அவ்வீர்க்குகளைச் செதுக்கிச் சேர்த்தால் விளக்குமாறு கிடைக்கிறது. தென்னை பனை கமுகு ஆகியவற்றின் பூமூடிய மடல் பாளை. தென்னையின் பிஞ்சு குரும்பை, குரும்பை முற்றினால் இளநீர், இளநீர் முற்றினால் தேங்காய். காய்த் தொகுதி குலை, காய்த்தொகுதியை மூடிய பகுதி மட்டை. சிலர் தென்னை ஓலையின் முழுப்பகுதியையும் மட்டை என்பர். தென்னைக் குலையிடைப் பகுப்புறுப்பு பன்னாடை. தென்னம்பாளையைச் செதுக்கி வடிக்கும் பொருள் கள்ளு. எத்தனை சொற்கள்… எத்தனை சொற்கள்…! அடுக்ககத்தில் பிறந்து வளரும் நகரக் குழந்தைகளுக்கு இச்சொற்களை எப்போது கூறி உணர்த்தினீர்கள் ?

 

தென்னையின் காய்த்தொகுதி குலை என்று பார்த்தோம். தெங்கு, பழை, வாழை, கமுகு, காந்தள், ஈந்து ஆகியவற்றின் காய்த்தொகுதி குலை. இங்கே தெங்கு எனப்பட்டது தென்னைதான். ஈந்து என்பது ஈச்சை மரத்தைக் குறிக்கும். நெல்லும் தொகுப்பாக விளைகிறது அதை என்னென்று சொல்வது ? கதிர் என்று சொல்ல வேண்டும். நெல்லும் சோளமும் கதிர்களாய் விளைவன. புளியங்காய்களும் தொகையாக விளைகின்றன, அவற்றை என்ன என்று சொல்ல வேண்டும் ? கொத்து. மாவும் புளியும் கொத்தாய் விளைவன. இவற்றை ஒன்றுக்கொன்று மாற்றிக்கூறக் கூடாது.

 

ஒவ்வொரு விளைபொருளின் உள்ளே இருப்பதற்கும் ஒவ்வொரு பெயர் இருக்கிறது. நெல்லுக்குள் இருப்பது அரிசி. அவரை துவரைக்குள் இருப்பது பருப்பு. வாழைக்குள் இருப்பது தசை. முருங்கைக்குள் இருப்பது சோறு.

 

இப்பொழுது விளங்குகிறதா ? அன்றாடப்பாட்டில் ஆயிரம் சொற்கள் வகை வகையாய் இருக்கின்றன. நாம் எல்லாவற்றையும் பொத்தாம் பொதுவாகக் கூறிக்கொண்டிருக்கிறோம். நமக்குத் தெரிந்தவற்றில் பகுதியளவே நம் பிள்ளைகளும் தெரிந்து வைத்திருக்கின்றன. நிலைமை இப்படியே சென்றால் இத்தகைய எளிமையான பழகுதமிழ்ச் சொற்கள்கூட மறக்கப்பட்டுவிடும். அறியாத சொல் அருஞ்சொல்லாகிவிடும். அரிதாகும் ஒவ்வொன்றும் நம்மிடமிருந்து மெல்ல மெல்ல அகன்றுவிடும். அதற்கு இடம் தரலாமா ? நம் சொற்களை இழக்கலாமா ? நம் பிள்ளைகள் சொல்லாட்சியின்றித் தவிப்பது தகுமா ? சொல்லறிவு பெறல் புலவர்க்கே உரித்தான தொழிலா ? எண்ணிப் பாருங்கள்.

 

முந்தைய பகுதி:

 

தண்ணீரோடு தொடர்புடைய சொல். ‘மி’ என்ற எழுத்தில் தொடங்க வேண்டும். அது என்ன??? கவிஞர் மகுடேசுவரன் எழுதும் சொல்லேர் உழவு - பகுதி 16

 

அடுத்த பகுதி:

“புலிப்பறழ்” என்ற சொல்லுக்கு பொருள் தெரியுமா??? -கவிஞர் மகுடேசுவரன் எழுதும் சொல்லேர் உழவு பகுதி 18