Skip to main content

திருமணத் தடை, பிரிவினைக்குத் தீர்வு!

Published on 05/02/2021 | Edited on 06/02/2021

னித வாழ்வின் மகத்தான அத்தியாயம் திருமணம். இந்தியர்களின் சமுதாயக் கட்டமைப்பு கணவன்- மனைவி, தாய்- தந்தை, உடன் பிறந்தவர்கள், குழந்தைகள் என கூட்டுக்குடும்பமாக இணைந்து வாழ்வதே. ஒரு குறித்த வயது வரை பெற்றோருடன் வாழும் மனிதன், தன் வாழ்வின் கடைசிநாள்வரை இணைந்து வாழ்வது, வாழவிரும்பவது வாழ்க்கைத் துணையுடன் மட்டுமே. மனிதனின் தனிமை யைத் தவிர்க்க வாழ்க்கைத்துணையால் மட்டுமே முடியும்.

மனித வாழ்வில் மிகக்கொடூரமான அத்தி யாயமென்பது பிரிந்து வாழ்வது மற்றும் தனிமை. வாழ்க்கைத்துணையின் இறப்பு, விவாகரத்து போன்ற காரணங்களால், இனி சேர்ந்தே வாழமுடியாது என்ற நிலை வரும் போது, அடுத்த கட்டத்தை நோக்கி அடி யெடுத்துவைக்கும் சிந்தனை தோன்றும். சில தம்பதிகள் தொழில் நிமித்தமாக வெவ்வேறு ஊர்களில் வசிக்கும்போது, பிரிவினை மனவேதனையைத் தந்தாலும், செல்போனில் கருத்துப் பரிமாற்றத்தின்மூலம் ஓரளவு நிம்மதி கிடைக்கும். கருத்து வேறுபாடு காரணமாக கணவன்- மனைவி பிரிந்து வாழும்போது ஏற்படும் தனிமை, வாழ்கையை நரகமாக்குகிறது.

வாழ்வின் இன்பமான நாட்களை- நினைவுகளை அசைபோட்டு, வாழவும் முடியாமல் சாகவும் முடியாமல் இல்லறச்சிறையில் கைதியாக வாழ்கிறார்கள். மறுபடியும் இணைந்து வாழ்வோமா என்ற கேள்விக் குறியுடன் பலரின் வாழ்க்கை தொடர்கிறது. பல இடங்களில் தம்பதிகள் விவாகரத்தும் கொடுக்காமல், சேர்ந்தும் வாழாமல் இரண்டும் கெட்டான் நிலையிலேயே வாழ்கிறார்கள்.

மைசூர் மகாராஜா அரண்மனை போன்ற வீட்டில் வாழ்பவர்கள்கூட பேசிக்கொள்ளாமல், ஆளுக்கொரு அறையில் தனியாக, மனம் ஒட்டாமல் வாழ்கிறார்கள்.

தற்காலத்தில் பணம் சம்பாதிப்பதைவிட ஒருவரின் மனதில் இடம்பிடித்து ஆதர்ன தம்பதியராக வாழ்வது மிகக்கடினமாக இருக் கிறது. தம்பதியரிடையே ஏற்படும் பிரிவினை, தனிமைக்கான காரணம், தீர்வு குறித்த ஜோதிடரீதியான ஆய்வே இந்தக் கட்டுரை.

ஜனனகால ஜாதகத்தில் 2, 7-ஆம் பாவகம், அதிபதிகள், 6, 8-ஆம் அதிபதிகளுடன் சம்பந் தம் பெறும்போது விவாகரத்து ஏற்படும்.

2, 7-ஆம் பாவகத்துடன் சம்பந்தம் பெறும் வக்ர கிரகங்கள் பிரிவினையைத் தரும்.

2, 7-ஆம் பாவகம், அதிபதிகள், 12-ஆம் பாவகம், அதிபதிகளுடன் சம்பந்தம் பெறும் போது பிரிவினை ஏற்படுகிறது. லக்ன சுபர் வலுப்பெற்றவர்களுக்கு 12-ஆம் அதிபதி, 12-ல் நின்ற கிரகங்களின் அந்தர காலங்களில் சுபமாகவோ, அசுபமாகவோ குறுகிய பிரிவினை ஏற்படுகிறது.

12-ஆம் அதிபதி- குறுகியகால தசை நடத்தும் கிரகங்களான சூரியன், சந்திரன், செவ்வாய், கேது போன்ற கிரகங்களாக இருந்தால், பாதிப்பும் குறுகிய காலமாகவே இருக்கிறது. நீண்டகாலம் தசை நடத்தும் குரு, சனி, ராகு, புதன், சுக்கிர தசைகள் வாழ்நாள் முழுவதையும் பிரிவினையுடனே கழிக்கச் செய்கின்றன.

லக்னம் வலிமையிழந்தவர்களில் பலர், வாழ்க்கைத்துணையுடன் சேருவோமா என்ற சந்தேகத்துடன் ஜோதிடரை அணுகு கிறார்கள்.

2, 7-ல் நிற்கும் 12-ஆம் அதிபதி திருமணத்தையே நடத்தித்தராமல், வாழ்க்கையை வெறுக்கச் வக்கிறது. 7-ஆம் இடம் என்பது களத்திரத்தை மட்டுமல்லாமல், நண்பரையும் குறிக்குமிடம் என்பதால், இத்தகையவர்களுக்கு சிறப்பான நண்பர்களும் அமைய மாட்டார்கள். இவர்களிடம் அன்பாக நடப் பவர்களைவிட முதுகில்குத்தி துரோகம் செய்பவர்களே அதிகம்.

12-ஆம் இடம் ஸ்திர லக்னமாக இருப் பவர்கள் 2, 7, 12-ஆம் பாவகம் மற்றும் அதிபதி களுடன் சம்பந்தம் பெற்றால் பிரிவினை நிரந்தரம்.

mm

சுக்கிரன் இல்லற வாழ்வுக் குரியவர். சுக்கிரன் ஆணுக்கு மனைவியைப் பற்றியும், பெண்ணுக்கு மணவாழ்க்கை யைப் பற்றியும் சொல்கிறவர். சுக்கிரன் களத்திரகாரகன்- அதாவது வாழ்க்கைத்துணையை அமைத்துக் கொடுப்பவர். சுக்கிரன் ஜாத கக்கட்டத்தில் நல்ல நிலையில் இருப்பது அவசியம். ஆணுடைய ஜாதகத்தில் சுக்கிரன் கேதுவுடன் எந்த விதத்திலாவது சம்பந்தம்பெற்று, 2, 7, 12-ஆம் அதிபதிகளுடன் இணைந்தால் காலதாமதத் திருமணம் தரும் அல்லது திருமணமே நடக்காது அல்லது தன் திருமணத்தை தானே காலம் தாழ்த்துவார்கள்.

செவ்வாய் ஆண்களுக்கு வீரியத்தையும், மாங்கல்ய பாக்கியத்தையும் தருபவர். பெண்களின் ஜாதகத்தில் செவ்வாய் கேதுவுடன் எந்த விதத்திலாவது சம்பந்தம் பெற்று, 2, 7, 12-ஆம் அதிபதிகளுடன் இணைந்தால் காலதாமதத் திருமணம் தரும் அல்லது திருமணமே நடக்காது அல்லது தன் திருமணத்தை தானே காலம் தாழ்த்துவார்கள்.

பெண் ஜாதகத்தில் செவ்வாய், ராகு சேர்ந்தும், ஆண் ஜாதகத்தில் சுக்கிரன், ராகு சேர்ந்துமிருந்தால், மனப்போராட்டத்தால் பிரிவினை ஏற்படுகிறது.

பெண் ஜாதகத்தில் 9-ஆம் அதிபதி அஸ்தமனமாக இருந்தால், கணவரால் எந்த சுகமும் கிடைக்கப்பெறுவதில்லை.

ஆண் ஜாதகத்திலுள்ள செவ்வாய் அமர்ந்த இடத்தில் பெண் ஜாதகத்தில் சனி இருப்பதும், பெண் ஜாதகத்திலுள்ள செவ்வாய் அமர்ந்த இடத்தில் ஆண் ஜாதகத்தில் சனி இருப்பதும் சிறப்பில்லை. இந்த அமைப்பிருந்தால், திருமணத்திற்குப் பின் தொழில், வேலையில் பாதிப்பு ஏற்பட்டு, ஜாதகருக்கு கையில் பணம் தங்காது. சுபமங்களப் பொருட்கள் சேராது. குடும்பத்தில் பிரிவினை ஏற்படும். சரியான தூக்கம் வராது.

6, 7-ஆம் அதிபதி ராகு அல்லது கேதுவுடன் சேர்ந்திருந்தால் திருமணத்தில் தடை ஏற்படும். அதிர்ஷ்டவசமாக திருமணம் நடந்தாலும், எத்தனை திருமணம் நடந்தாலும் அத்தனையும் தோல்வியில் முடியும்.

இதை ஒரு உதாரண ஜாதகத்துடன் பார்க்கலாம்.

இது ஆண் ஜாதகம்: 27-11- 1979-ஆம் ஆண்டு இரவு 11.15 மணிக்குப் பிறந்தவர்.

லக்னாதிபதி சூரியன் கேந்திரம் ஏறியுள்ளார். 5-ஆம் அதிபதி குரு லக்னத்தில், 9-ஆம் அதிபதி செவ்வாயும் லக்னத்தில் என மேலோட்டமாக சுபப் பலன்களை மிகுதியாக அனுபவிப்பவர் என்று கூறலாம். குருவுக்கும் சுக்கிரனுக்கும் சம்பந்தம் இருப்பதால் திருமண வாழ்க்கை சிறப்பாக இருக்கும் என்றும் கூறலாம். இதுவரை இவருக்குத் திருமணம் நடைபெறவில்லை. எந்த திருமணப் பரிகாரத்தாலும் பலனில்லையென்று கூறினார். அவருக்குத் திருமணம் நடைபெறாத காரணத்தை முதலில் அறியலாம்.

2-ஆம் அதிபதி புதன் வக்ரம். 7-ஆம் அதிபதி சனி 2-ல் நின்றாலும், 2-ஆமிடத்தில் நிற்கும் சனி பகவான் குடும்ப வாழ்வில் தடை, தாமதத்தைத் தருவார். 7-ஆமிடத்தில் சந்திரன், கேது சேர்க்கை. 12-ஆம் அதிபதி சந்திரன் 7-ல் கேதுவுடன் உள்ளார். பிறப் பிலேயே திருமண அமைப்பு குறைவு. 34 வயது வரை வீடு, வாகனம், பேங்க் பேலன்ஸ் சேர்த்து விட்டுத் திருமணம் செய்யலாம் என்ற ஆர்வத் தில், திருமணத்தைப் பற்றி யோசிக்கவில்லை.

சனி தசை முடிந்து புதன் தசை வந்த வுடன், 2-ஆம் அதிபதி தசை என்பதால், திருமண ஆசை வந்து முயற்சிசெய்தபோது, போதிய பொருளாதார வசதி இருந்தும் பெண் கொடுக்க யாரும் முன்வரவில்லை. சுக்கிரன் கேது சாரம் என்பதால், திருமண வாய்ப்பே இல்லையென்ற நிலை ஏற்பட்டது. 5-ஆம் அதிபதி குருவையும், 9-ஆம் அதிபதி செவ்வாயையும் சேரவிடாமல் ராகு பிரிக்கிறது. அதாவது பாக்கியப் பலனும் பூர்வபுண்ணியமும் பலன் தராத நிலை. இவருக்குரிய பரிகாரமுறை வழங்கி, திருமணத்திற்குப் பின் பிரிவினை ஏற்படாமலிருக்கவும் ஆலோசனை கூறப்பட்டது. தை மாதம் திருமணம் நடைபெறவுள்ளது.

திருமணத்திற்குப்பிறகு, பிரிந்து தனிமை யில் வாழும் தம்பதியினரும், திருமணமே நடக்காமல் தனிமையில் வாழ்பவர்களும் உங்களின் 5-ஆம் அதிபதியின் தெய்வத்தைத் தொடர்ந்து 48 நாட்கள் வழிபடவேண்டும்.

5-ஆம் அதிபதி:

சூரியன்- சிவ வழிபாடு

சந்திரன்- அம்மன் வழிபாடு

செவ்வாய்- முருகன் வழிபாடு

புதன்- பெருமாள் வழிபாடு

குரு- சித்தர்கள் வழிபாடு

சுக்கிரன்- மகாலட்சுமி வழிபாடு

சனி- காவல் தெய்வம்

ஒருவரது ஜாதகத்தை எடுத்துக் கொண்டால் லக்னம்- ஆன்மாவையும், சந்திரன்- உடலையும் குறிக்கும். சந்திரனானது ஏதாவது ராசியில், ஒரு ஜென்ம நட்சத்திரப் பாதத்தில் இருக்கும். அதுவே பிறந்த நட்சத்திரமாகும். அந்த நட்சத்திரத்துக்கு அதிபதி, இந்த உடலை இயக்குபவர். கர்மவினைகளுக்கேற்ப இந்த உடல் அனுபவிக்கும் நன்மை, தீமைகளுக்குக் காரணமானவர்.

இந்த ஜென்ம நட்சத்திர நாளில் இஷ்டதெய்வ வழிபாடு செய்தால் நலமுண்டாகும்.

ஜென்ம நட்சத்திர பூஜை முடித்து, ஏழை- எளியவர்களுக்கு தானங்கள் செய்தால், பித்ருக்கள் ஆசியால் தடைகள் அகலும்.

செல்: 98652 20406