அமெரிக்க பிரதிநிதிகள் சபையில் இன்று அதிபர் டிரம்ப்புக்கு எதிராக தீர்மானம் தாக்கல் செய்யப்படும் சூழலில், சபாநாயகர் நான்சி பெலோசிக்கு டிரம்ப் எழுதிய கடிதத்தில், எதிர்க்கட்சியை கடுமையாக விமர்சித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதிபர் தேர்தலில் டிரம்ப்பை எதிர்த்து போட்டியிட உள்ள ஜனநாயக கட்சியின் ஜோ பிடனின் மகனுக்கு உக்ரைன் எரிவாயு நிறுவனத்தில் உள்ள வர்த்தகத் தொடர்பு குறித்து தகவல்களை திரட்டுமாறு உக்ரைன் நாட்டு அரசுக்கு டிரம்ப் நெருக்கடி கொடுத்ததாகவும், மேலும் தகவல்களை திரட்டி கொடுக்கும் வரை உக்ரைனுக்கு அமெரிக்காவின் நிதியுதவி கிடைக்காது என மிரட்டியதாகவும் எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின. இதனையடுத்து டிரம்ப்பை பதவி நீக்கம் செய்வது தொடர்பான தீர்மானம் எதிர்கட்சிகளால் கொண்டு வரப்பட்டுள்ளது.
முதல்கட்டமாக இன்று இந்த தீர்மானம் பிரதிநிதிகள் சபையில் தாக்கல் செய்யப்படுகிறது. பிரதிநிதிகள் சபையில் ஜனநாயக கட்சிக்கு 236 உறுப்பினர்களும், டிரம்பின் குடியரசுக் கட்சிக்கு 197 உறுப்பினர்களும் உள்ளனர். எனவே கண்டனத் தீர்மானம் அங்கு கண்டிப்பாக நிறைவேறும். இதனையடுத்து செனட் சபையில் இந்த தீர்மானம் தாக்கல் செய்யப்பட வேண்டும். செனட் சபையில் டிரம்பின் குடியரசுக் கட்சிக்கு 53 உறுப்பினர்களுடன் பெரும்பான்மை இருப்பதால் கண்டனத் தீர்மானம் தோற்கடிக்கப்படும் என கூறப்படுகிறது.
இந்த நிலையில், சபாநயகருக்கு டிரம்ப் எழுதிய கடிதத்தில், "இது அமெரிக்க ஜனநாயகத்தின் மீதான வெளிப்படையான யுத்தம். அதிகாரத்தை நான் தவறாகப் பயன்படுத்தவில்லை. வரலாறு உங்கள் தவறான நடவடிக்கையை கடுமையாக கண்டனம் செய்யும். வரும் 2020 தேர்தலில் மக்கள் உங்களையும், அதிகார துஷ்பிரயோகத்தையும், ஜனநாயகக் கட்சியையும் மக்கள் மன்னிக்க மாட்டார்கள்" என தெரிவித்துள்ளார்.