ஆசியாவிலேயே முதல் நாடாக தாய்லாந்து போதைப்பொருளான கஞ்சா பயன்பாட்டிற்கு சட்ட அனுமதி வழங்கியுள்ளது.
பொருளாதாரத்தை உயர்த்தும் நோக்கிலும், மருத்துவப் பயன்பாட்டிற்காகவும் கஞ்சாவுக்கு அனுமதி அளித்துள்ளதாகத் தாய்லாந்து நாட்டின் சுகாதாரத்துறை அமைச்சர் அறிவித்துள்ளார். அதே நேரத்தில், பொழுதுபோக்கிற்காகக் கஞ்சாவைப் பயன்படுத்துவதற்குத் தடை தொடர்வதாகவும் அவர் எச்சரித்துள்ளார். உணவில் கஞ்சாவைச் சேர்த்துச் சமைக்கலாம் என்றும், ஆனால், அதில் போதை தருகிற பொருள் 0.2%- க்கும் குறைவாகவே இருக்க வேண்டும் என்று தாய்லாந்து அரசு அறிவுறுத்தியுள்ளது. உணவு மற்றும் மருத்துவ தேவைகளுக்காக மட்டுமே கஞ்சாவுக்கு அனுமதி வழக்கப்பட்டுள்ளதாகவும், போதைக்காக கஞ்சா புகைப்பது குற்றம்தான் என்றும் அந்நாட்டு அரசு தெளிவுபடுத்தியுள்ளது. அதேபோல, கஞ்சா வளர்ப்பை ஊக்குவிக்கும் வகையில் 10 லட்சம் கஞ்சா செடிகளையும் இலவசமாக மக்களுக்கு வழங்கியுள்ளது அந்நாட்டு அரசு.
இந்தியா, இலங்கை, சிங்கப்பூர், மலேசியா உள்ளிட்ட நாடுகளில் கஞ்சா செடிகளை வளர்ப்பது பெருங்குற்றம். மேலும், கஞ்சா விற்பனை, கடத்தல் உள்ளிட்ட நடவடிக்கைகளில் ஈடுபடும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கைகளை அந்நாட்டு அரசுகள் எடுத்து வரும் நிலையில், கஞ்சாவுக்குத் தாய்லாந்து அரசு அனுமதி அளித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.