அவ்வப்போது சர்ச்சையில் சிக்கும் நாடுகளுக்கு மத்தியில் எப்போதும் சர்ச்சைக்குள்ளேயே சிக்கி இருக்கும் நாடு வடகொரியா. அதேபோல சர்ச்சையில் சிக்கிக் கொள்பவர் அந்நாட்டு அதிபர் கிம் ஜாங் உன். இந்நிலையில் மீண்டும் கொரிய தீபகற்பத்தில் பரபரப்பை ஏற்படுத்தும் நிகழ்வை அரங்கேற்றி உள்ளது வடகொரியா.
ஐ.நா உள்ளிட்ட உலகின் எந்த அமைப்புக்கும் கட்டுப்படாமல் செயல்பட்டு வரும் வடகொரியா அண்டை நாடுகளான ஜப்பான், தென் கொரியா ஆகிய நாடுகளை மிரட்டும் வகையில் அவ்வப்போது ஏவுகணைகளை ஏவி விட்டு பயமுறுத்தி வருகிறது. கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு ஜப்பானை நோக்கி வடகொரிய ராணுவம் ஏவுகணை வீசி உள்ளதாக பரபரப்பு ஏற்பட்டது. இது தொடர்பாக ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் அமெரிக்கா கண்டனம் தெரிவித்துள்ளது. தொடர்ந்து அத்துமீறல் ஈடுபட்டு வரும் வடகொரியாவுக்கு சீனாவும், ரஷ்யாவும் ஆதரவளிப்பதாக குற்றம்சாட்டி இருக்கிறது. ஏற்கனவே நிகழ்ந்த இந்த சம்பவத்தின் பதற்றம் தணிவதற்குள் கடந்த 6 தேதி காலை ஜப்பான் கடல் பகுதியில் அடுத்தடுத்து இரண்டு ஏவுகணைகளை வீசி மீண்டும் கொரிய தீபகற்பத்தை பரபரப்பாக்கி இருந்தது வடகொரியா.
இந்நிலையில் மீண்டும் வடகொரியா தொடர்ந்து ஏவுகணை சோதனையில் ஈடுபட்டதால் இந்த பதற்றமான சூழல் தொடர்ந்து வருகிறது. நீண்ட தூர இலக்குகளை தாக்கும் வகையிலான இரண்டு ஏவுகணைகளை வடகொரியா சோதித்துள்ளது. இந்த சோதனையை வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் நேரில் பார்த்ததோடு அதனை உருவாக்கிய விஞ்ஞானிகளுக்கு பாராட்டு தெரிவித்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.