கடந்த மூன்று மாதங்களாக ஆஸ்திரேலியா முழுவதும் பல்வேறு இடங்களில் காட்டுத் தீ ஏற்பட்டு பலத்த பொருட்சேதமும், உயிர் சேதமும் ஏற்பட்டுள்ளது.
கடந்த மூன்று மாதமாக தெற்கு சவுத்வேல்ஸ் மாகாணத்தில் தொடங்கிய காட்டுத்தீயை அணைக்க ஆஸ்திரேலிய அரசு கடுமையாக போராடி வருகிறது. இருப்பினும் வறண்ட வானிலை மற்றும் காற்றின் வேகம் காரணமாக காட்டுத்தீ கட்டுப்படுத்த முடியாத அளவு வேகமாக பரவி வருகிறது. தெற்கு சவுத்வேல்ஸ் மாகாணத்தில் தொடங்கிய காட்டுத்தீ தற்போது மெல்ஃபோர்ன் நகர் வரை பரவி உள்ளது. இந்தக் காட்டுத் தீயால் இதுவரை 1300 வீடுகள் இரையாகியுள்ளன. சுமார் 5.5 மில்லியன் ஏக்கர் பரப்பளவில் உள்ள நிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. இந்த காட்டுத் தீயினால் இதுவரை 18 பேர் பலியாகி உள்ள நிலையில் 12 பேர் மாயமாகி உள்ளனர்.
இந்நிலையில் இந்த காட்டுத்தீயை அணைக்கும் முயற்சிக்கு உலகம் முழுவதும் உள்ள பிரபலங்கள் தங்களால் ஆன நிதியுதவியை செய்து வருகின்றனர். அந்த வகையில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ஷேன் வார்னே தனது கிரிக்கெட் வாழ்வின் முக்கியமான பேகி கிரீன் தொப்பியை ஏலத்தில் விட்டு, அந்த தொகையை தீயணைப்புக்கு உதவ கொடுத்துள்ளார். ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்கள் டெஸ்ட் போட்டியில் அறிமுகம் ஆகும் போது கொடுக்கப்படும் இந்த பேகி கிரீன் தொப்பி அவர்களின் பெருமைக்குரிய சின்னமாக பார்க்கப்படுகிறது. அந்த வகையில் ஷேன் வார்னேவின் இந்த தொப்பி சுமார் ரூ.4.96 கோடிக்கு காமன்வெல்த் வங்கியால் ஏலம் எடுக்கப்பட்டது. இந்த தொகை நேரடியாக செஞ்சிலுவை சங்கத்துக்கு சென்றடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.