இங்கிலாந்து ராணி எலிசபெத் உயிரிழந்தார். அவருக்கு வயது 96. மருத்துவர்களின் தொடர் கண்காணிப்பிலிருந்த அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். பிரிட்டன் வரலாற்றில் அதிக காலம் ராணியாக இருந்தவர் என்ற சிறப்பை பெற்றவர் இரண்டாம் எலிசபெத். இவர், கடந்த 1952 முதல் பிரிட்டன் ராணியாக இருந்து வந்தார்.பிரிட்டன் ராணி இரண்டாம் எலிசபெத்தின் கணவர் இளவரசர் பிலிப், கடந்த ஆண்டு ஏப்ரல் 9, 2021-ல் உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ராணி எலிசபெத்தின் மறைவை ஒட்டி அவருக்கு பல்வேறு தலைவர்களும் இரங்கல் தெரிவித்து வரும் நிலையில் இங்கிலாந்துக்கே நேரில் சென்று அஞ்சலி செலுத்த இருக்கின்றனர். மறைவு குறித்தான இரங்கல் பதிவில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன், எலிசபெத் ஒரு சகாப்தத்தைக் காட்டிலும் மேலானவர் என்று கூறியுள்ளார். அமெரிக்காவில் தேசியக்கொடிகள் அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்டுள்ளன. முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், இரண்டாம் எலிசபெத் அவரின் தைரியம் மற்றும் கருணைக்காக உலகம் என்றும் நினைவில் வைத்துக்கொள்ளும் எனக் கூறியுள்ளார்.
இந்நிலையில் இங்கிலாந்து ராணி எலிசபெத்தின் இறுதி சடங்கில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கலந்துகொள்ள உள்ளார். கொலம்பஸில் செய்தியாளர்களை சந்தித்த அவர் ராணியின் இறுதிச் சடங்கில் கலந்துகொள்ள இருப்பதாகவும் இன்னும் மன்னர் சார்லசிடம் இன்னும் பேசவில்லை என்றும் கூறியுள்ளார். மேலும் "அமெரிக்க நாட்டின் சார்பில் இங்கிலாந்து மக்களுக்கும், இங்கிலாந்து அரசுக்கும் மற்றும் அரச குடும்பத்தினருக்கும் தெரிவித்துக் கொள்கிறேன்" என கூறியுள்ளார்.