உலகம் முழுவதும் கரோனா பாதிப்பு உச்சத்தில் இருந்து வருகின்றது. இதுவரை 72 லட்சத்துக்கும் அதிகமானவர்களை இந்த நோய் தாக்கியுள்ளது. 4 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் இந்த நோயினால் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் 7000-க்கும் மேற்பட்டவர்கள் இதனால் உயிரிழந்துள்ளனர். 2,00,000- க்கும் மேற்பட்டவர்கள் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். உலகின் பல நாடுகளுக்கு கரோனா வைரஸ் பரவியுள்ள நிலையில், இதனை தங்களது நாட்டில் பரவாமல் தடுக்க உலக நாடுகள் பலவும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. பல நாடுகள் தங்கள் நாடுகளில் ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தியுள்ளன.
பள்ளிகள், கல்லூரிகள் முதலியன உலகம் முழுவதும் மூடப்பட்டுள்ளன. இந்நிலையில் கரோனாவிற்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் வரையில் பள்ளிகள் திறக்கப்படாது என்று பிலிப்பைன்ஸ் அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில் அந்நாட்டு கல்வி அமைச்சர் லியோனர் பிரியோனஸ் இதுதொடர்பாக பேசியதாவது, "கரோனாவுக்கு தடுப்பூசி கண்டுபிடிக்கும் வரையில் நாடு முழுவதும் பள்ளிகள் மீண்டும் திறக்கப்படாது. குழந்தைகளை தனிமனித இடைவெளியுடன் பள்ளியில் அமர வைப்பது என்பது கடினமான காரியம். அவர்கள் தங்களின் நண்பர்களை நெருங்கும்போது கரோனா தொற்று நிச்சயம் ஏற்படும். ஏனவே அரசு இந்த முடிவை எடுத்துள்ளது" என்றார். பிலிப்பைன்ஸில் இதுவரை 22 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.