Skip to main content

புதிய வகை கரோனாவுக்கு பெயரிட்ட WHO; கவலைக்குரியது என அறிவிப்பு!

Published on 27/11/2021 | Edited on 27/11/2021

 

WOLRD HEALTH ORGANISATION

 

தென்னாப்பிரிக்கா நாட்டில் 50க்கும் மேற்பட்ட மரபணு பிறழ்வுகளுடன் பி.1.1.529 என்ற புதிய கரோனா திரிபு கண்டறியப்பட்டுள்ளது. இந்த 50க்கும் மேற்பட்ட மரபணு பிறழ்வுகளில், 30க்கும் மேற்பட்ட பிறழ்வுகள் வைரஸின் ஸ்பைக் ப்ரோட்டினில் ஏற்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

 

ஸ்பைக் ப்ரோட்டினில் பல பிறழ்வுகள் இருப்பதால், இது வேகமாக பரவலாம் என்றும், தடுப்பூசிகள் அளிக்கும் நோயெதிர்ப்பு சக்தியை ஊடுருவலாம் என்றும் அஞ்சப்படுகிறது. இந்தப் புதிய வகை கரோனா திரிபு, நோயெதிர்ப்பு குறைபாடுள்ள நபரின் நாள்பட்ட தொற்றிலிருந்து உருவாகியிருக்கலாம் எனவும், அந்த நபர் எச்.ஐ.வி. நோய்க்கு சிகிச்சை எடுக்காத நபராக இருந்திருக்கலாம் எனவும் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

 

அதேநேரத்தில் இந்தப் புதிய வகை கரோனா திரிபு, போட்ஸ்வானா நாட்டிற்கும் பரவியுள்ளது. மேலும், தென்னாப்பிரிக்காவிலிருந்து ஹாங்காங் வந்த இருவருக்கும், மலாவியிலிருந்து இஸ்ரேல் திரும்பிய ஒருவருக்கும் இந்தப் புதிய வகை கரோனா திரிபு கண்டறியப்பட்டுள்ளது. அதேபோல் வேறொரு நாட்டிலிருந்து பெல்ஜியம் நாட்டிற்கு வந்த தடுப்பூசி செலுத்திக்கொள்ளாத நபருக்கு புதிய வகை கரோனா திரிபால் பாதிக்கப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

 

மேலும், இந்தப் புதிய வகை கரோனா திரிபு கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து, பல்வேறு நாடுகள் தென்னாபிரிக்காவிலிருந்தும், அதனைச் சுற்றியுள்ள நாடுகளிலிருந்தும் தங்கள் நாட்டிற்கு வர தடை விதித்துள்ளன. அதேபோல் தென்னாப்பிரிக்கா, ஹாங்காங், போட்ஸ்வானா ஆகிய மூன்று நாடுகளிலிருந்தும் வருபவர்களுக்குத் தீவிர சோதனைகள் நடத்த இந்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இதனிடையே, புதிய வகை கரோனா திரிபு அச்சத்தால் உலகம் முழுவதும் பங்கு சந்தைகளில் பாதிப்பு ஏற்பட்டுவருகிறது.

 

இந்தநிலையில் உலக சுகாதார நிறுவனம், நேற்று (26.11.2021) புதிய வகை கரோனா திரிபு குறித்து சிறப்பு கூட்டத்தை நடத்தியது. இந்தக் கூட்டத்தை தொடர்ந்து உலக சுகாதார நிறுவனம், புதிய வகை கரோனா திரிபை கவலைக்குரியது என அறிவித்துள்ளது. மேலும், இந்தப் புதிய வகை கரோனா திரிபுக்கு ‘ஓமிக்ரான்’ எனப் பெயரிட்டுள்ள உலக சுகாதார நிறுவனம், இந்த ஓமிக்ரானின் பரவும் தன்மை, தீவிரத்தன்மை, தடுப்பூசி தாக்கம் ஆகியவற்றில் எதாவது மாற்றம் இருக்கிறதா என்பது குறித்த ஆய்வினை நிறைவு செய்ய சில வாரங்கள் பிடிக்கும் என கூறியுள்ளது.

 

இந்த ஓமிக்ரான் வகை கரோனாவால், ஏற்கனவே கரோனாவிலிருந்து மீண்டவர்களுக்கு மீண்டும் தொற்று ஏற்பட அதிகம் வாய்ப்பிருப்பதாக முதற்கட்ட ஆதாரங்கள் கூறுவதாகவும் உலக சுகாதார நிறுவனம் கூறியுள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்