Skip to main content

அதிகாரப் போட்டியால் கவிழ்ந்த அரசு! - குழப்பத்தில் அண்டை நாடு!

Published on 10/05/2021 | Edited on 10/05/2021

 

kp sharma oli

 

நேபாள நாட்டைச் சேர்ந்தவர் கே.பி.சர்மா ஒலி. ஆளும் நேபாள கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த இவருக்கும், நேபாள நாட்டின் முன்னாள் பிரதமர் புஷ்ப கமல் தஹாலுக்கும் அதிகாரப் போட்டி நடந்துவந்தது. அதன்தொடர்ச்சியாக இருவருக்கும் இடையேயான மோதல், அவசரச் சட்டம் விவகாரம் ஒன்றில் பெரிதாக வெடித்தது. இதனைத் தொடர்ந்து, பிரதமர் கே.பி.சர்மா ஒலி நாடாளுமன்றத்தைக் கலைத்தார். இது புஷ்ப கமல் தஹால் குழுவுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியது.

 

இதனையடுத்து, புஷ்ப கமல் தஹால் தலைமையில் அவரது ஆதரவாளர்கள் கூட்டம் கூடி, பிரதமர் கே.பி.சர்மா ஒலியை, நேபாள கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் பதவியிலிருந்து நீக்குவதாக அறிவித்தது. அதேநேரத்தில் நேபாள நாட்டு உச்சநீதிமன்றம், நாடாளுமன்றத்தைக் கலைத்தது செல்லாது என அறிவித்தது.

 

இந்தநிலையில் ஆட்சியையும், அதிகாரத்தையும் கைப்பற்றும் பொருட்டு, நேபாள நாடாளுமன்றத்தில் கே.பி.சர்மா ஒலி இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தினார். ஆனால் இந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் கே.பி.சர்மா ஒலி தோல்வியடைந்தார். 93 பேர் கே.பி.சர்மா ஒலிக்கு ஆதரவாகவும், 124 எதிராகவும் வாக்களித்தனர். 15 பேர் நடுநிலை வகித்தனர். நம்பிக்கை வாக்கெடுப்பில் தோல்வியடைந்ததால், கே.பி.சர்மா ஒலி தலைமையிலான ஆட்சி கவிழ்ந்துள்ளது. இதனைத் தொடர்ந்து கே.பி.சர்மா ஒலி, தனது பதவியை ராஜினாமா செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. 

 

 

 

சார்ந்த செய்திகள்