பெய்ரூட்டின் துறைமுகப்பகுதியில் செவ்வாய்க்கிழமை பிற்பகலில் ஏற்பட்ட மிகப்பெரிய வெடிவிபத்து அந்நகரத்தையே தலைகீழாக திருப்பி போட்டுள்ளது. நகரின் ஒருபகுதியில் ஏற்பட்ட இந்த வெடிப்பின் காரணமாக ஏற்பட்ட அதிர்வலைகள் அந்நகரத்தில் புறநகர்ப் பகுதிகளிலும் கடுமையாக உணரப்பட்டது. ஆயிரக்கணக்கான வீடுகள், கட்டிடங்கள் சேதமடைந்துள்ள நிலையில், இதுவரை இந்த விபத்தில் 160க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர் எனவும், 4,000க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர் எனவும், 3,00,000 மேற்பட்டோர் வீடுகளை இழந்து தவித்து வருகின்றனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
துறைமுக கிடங்கில் சேமித்து வைக்கப்பட்டிருந்த 2,700 டன் பறிமுதல் செய்யப்பட்ட அம்மோனியம் நைட்ரேட் வெடித்ததே இதற்கான காரணம் எனக் கூறப்படும் நிலையில், அரசாங்கம் மற்றும் அதிகாரிகளின் அலட்சியம் காரணமாகவே இந்த விபத்து நிகழ்ந்துள்ளதாக அந்நாட்டு மக்கள் குற்றம்சாட்டி வருகின்றனர். மேலும், இதனால் ஆத்திரமடைந்த மக்கள் லெபனான் முழுவதும் போராட்டங்களில் ஈடுபட்டனர். இந்நிலையில், அந்நாட்டின் பிரதமர் டியாப் தலைமையில் நேற்று கூடிய அமைச்சரவைக் கூட்டத்தில், டியாப் தலைமையிலான அரசு மொத்தமாக பதவி விலகுவதாக முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து தமது அரசின் பதவி விலகல் அறிவிப்பை, நாட்டு மக்களிடம் தொலைக்காட்சியில் தோன்றி ஹஸ்ஸன் டியாப் வெளியிட்டார். பின்னர் அந்நாட்டு அதிபருக்கு ராஜினாமா கடிதம் அனுப்பப்பட்ட நிலையில், அதனை அதிபர் ஏற்றுக்கொண்டுள்ளார்.