Skip to main content

தென்கொரியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு – உண்மை நிலவரம் என்ன?

Published on 24/02/2020 | Edited on 24/02/2020

 

 

தென்கொரியாவில் கொரோனா வைரஸ் தொற்று வேகமாக பரவி வரும் நிலையில், இதுவரை 7 பேர் இறந்திருப்பதாகவும், திங்கள் கிழமை நிலவரப்படி 738 பேர் வைரஸ் தாக்குதலுக்கு ஆளாகி இருப்பதாகவும் கொரியா தமிழ்ச்சங்க தலைவர் ராமசுந்தரம் தெரிவித்தார்.

 

கொரியா தமிழ்ச்சங்கத்தின் தலைவர் முனைவர் ராமசுந்தரத்துடன் தொடர்பு கொண்டு சில கேள்விகளை முன்வைத்தோம். அவற்றுக்கு  அவர் அளித்த பதில்கள் கொரியாவில் வாழும் இந்தியர்களுக்கு மட்டுமின்றி, தமிழகத்தில் வாழும் அவர்களுடைய குடும்பத்தினருக்கும் ஆறுதலாக இருக்கும் என்று நம்புகிறோம்.

 

corona


 

 

கேள்வி - தென்கொரியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு எப்படி இருக்கிறது? எத்தனை பேர் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்? எத்தனை பேர் இறந்திருக்கிறார்கள்?

 

பதில் - கடந்த புதன்கிழமை கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்கள் 36 பேர் என்றுதான் அறிவிக்கப்பட்டது. ஆனால், தேகு என்ற பகுதியில் உள்ள தேவாலயத்தில் நடந்த ஒரு மரணநிகழ்வுக்கு பிறகு இந்த பாதிப்பு வேகமாகியது. இன்று திங்கள்கிழமை கணக்குப்படி 738 பேர் பாதிக்கப்பட்டிருப்பதாக அறிவித்துள்ளார்கள்.

 

 

கேள்வி - இந்தியர்கள் யாரேனும் பாதிக்கப்பட்டிருக்கிறார்களா? அவர்களில் பலர் பீதியில் தென் கொரியாவை விட்டு இந்தியாவுக்கு திரும்புவதாக கூறப்படுவது உண்மையா?

 

பதில் - இந்தியர்கள் யாரும் பாதிக்கப்படவில்லை. ஆனால், இந்தியர்கள் அதிகமாக வசிக்கும் பகுதியில்தான் நோய்த் தொற்று பரவுவதால் பயம் அதிகரித்திருக்கிறது. எனவே, இந்த காலகட்டத்தில் இந்தியா திரும்ப திட்டமிட்டிருந்தவர்கள் சற்று முன்கூட்டியே இந்தியா திரும்புகிறார்கள். ஆனாலும் அப்படி திரும்புகிறவர்கள் எண்ணிக்கை இதுவரை 50க்கும் கீழ்தான் இருக்கும் என்று நினைக்கிறேன்.

 

 

கேள்வி - தென் கொரியா அரசு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டிருக்கிறதா? பீதியை போக்கும் வகையில் செயல்படுகிறதா?

 

பதில் - தென் கொரியா அரசு தீவிரமாக நடவடிக்கை எடுக்கிறது. நோய்த் தொற்று அறிகுறி கண்டறியப்பட்டால், அந்த பகுதியை உடனடியாக தனிமைப்படுத்துகிறார்கள். தேவையான தூய்மை நடவடிக்கைகளை எடுத்த பிறகே மக்கள் நடமாட்டத்தை அனுமதிக்கிறார்கள். வேலை நேரத்திலும் சாதாரண சமயங்களிலும் முகமூடி அணிந்தே இருக்க வேண்டும் என்று அறிவுறுத்துகிறார்கள். இந்திய தூதரகமும் அவ்வப்போதைய நிலைமையை அறிவிக்கிறது. கொரியாவைப் பொருத்தமட்டில் கொரியர்கள் இயல்பாகவே இருக்கிறார்கள். இதுவரை 7 பேர் கொரோனா வைரஸ் பாதிப்பிற்கு பலியாகி இருக்கிறார்கள். இவர்களில் 5 பேர் தேகு பகுதியில் உள்ள புதிய உலகம் என்ற தேவாலயத்தில் நடைபெற்ற மரண நிகழ்வில் பங்கேற்றவர்கள்.

 

இவ்வாறு ராமசுந்தரம் தெரிவித்தார்.

 

 

 

சார்ந்த செய்திகள்