Skip to main content

இந்தியாவிற்கு கவலையை ஏற்படுத்திய அமெரிக்க அதிபரின் அறிவிப்பு!

Published on 16/04/2021 | Edited on 16/04/2021

 

joe biden

 

கடந்த 2001 ஆம் ஆண்டில், அமெரிக்காவின் நியூயார்க்கில் அல்குவைதா தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதனையடுத்து அமெரிக்கா, அல்குவைதா மற்றும் தலிபான் தீவிரவாத இயக்கங்களுக்கு எதிராக தீவிர நடவடிக்கையில் இறங்கியது. அமெரிக்கப் படைகள் ஒசாமா பின்லேடனை கொன்று, அல்குவைதா அமைப்பை ஒடுக்கினாலும், ஆப்கானிஸ்தானில் தலிபான் தீவிரவாதிகளை ஒடுக்குவதற்காக அமெரிக்கப் படைகள் அங்கு தொடர்ந்து முகாமிட்டு வந்தன.

 

இந்தநிலையில், ஆப்கானிஸ்தானில் இருந்து படைகளை விலக்கிக் கொள்ள அமெரிக்கா முடிவு செய்துள்ளது. இதுதொடர்பாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன், அமெரிக்காவில் தாக்குதல் நடத்திய அல்குவைதா அமைப்பை ஒடுக்கிவிட்டோம். ஆப்கானிஸ்தானில் அமைதியை ஏற்படுத்த அமெரிக்கப் படைகள் தொடர்ந்து முயற்சிக்கும். ஆனால், தலைமுறை தலைமுறையாக நம் படைகள் அங்கு இருக்கமுடியாது. எனவே, அமெரிக்காவில் தாக்குதல் நடத்தப்பட்ட 20-ஆம் ஆண்டு நிறைவுக்குள் (செப்டெம்பர் 11க்குள்) ஆப்கானிஸ்தானிலிருந்து நம் படைகள் முழுமையாக விலக்கிக்கொள்ளப்படும். ஆப்கானிஸ்தானில் அமைதி ஏற்படுத்த அந்தப் பிராந்தியத்திலுள்ள நாடுகள், குறிப்பாக பாகிஸ்தான் உதவவேண்டும். ரஷ்யா, சீனா, இந்தியா உள்ளிட்ட நாடுகளும் தங்கள் பங்களிப்பை அளிக்கவேண்டும் எனக் கூறியுள்ளார்.

 

அமெரிக்காவின் இந்த முடிவு, இந்தியாவிற்குக் கவலையை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக கருத்துத் தெரிவித்துள்ள பாதுகாப்பு வல்லுநர்கள், கடந்த காலங்களில் தீவிரவாதிகளின் புகலிடமாக ஆப்கானிஸ்தான் இருந்தது. அங்கு தீவிரவாதிகள் பதுங்கியிருந்தனர். அவர்களுக்குப் பயிற்சி அளிக்கப்பட்டது. அவற்றில் சில அமைப்புகள் இந்தியாவில் தாக்குதல் நடத்தின. தற்போது அமெரிக்கப் படைகள் விலக்கிக் கொள்ளப்படுவதால், ஆப்கானிஸ்தானில் மீண்டும் அதேநிலை உருவாகும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இது இந்தியாவிற்குக் கவலையை அளித்துள்ளது எனத் தெரிவித்துள்ளனர். 

 


 

சார்ந்த செய்திகள்