Skip to main content

முகக்கவசம் அணிவதற்கு 'டாட்டா'! - கரோனாவிலிருந்து மீண்டெழுந்த தேசம்!

Published on 19/04/2021 | Edited on 19/04/2021

 

ISRAEL

 

உலகம் முழுவதும் கரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் உலகில் உள்ள பல்வேறு நாடுகளும், ஊரடங்கு போன்ற கட்டுப்பாடுகளை அமல்படுத்தியுள்ளன. கரோனாவிலிருந்து மக்கள் தங்களை பாதுகாத்துக் கொள்வதில் முகக்கவசம் பெரும் பங்கு வகிக்கிறது.

 

இந்தநிலையில் இஸ்ரேல் நாடு, பொதுவெளியில் முகக்கவசம் அணிவதிலிருந்து தம் மக்களுக்கு விலக்கு அளித்துள்ளது. இஸ்ரேலில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் பொதுமக்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கி வேகமாக நடைபெற்று வருகிறது. தற்போது அந்தநாடு தனது மக்கள் தொகையில், பாதிக்கும் மேற்பட்டவர்களுக்கு கரோனா தடுப்பூசியைச் செலுத்தியுள்ளது. 61 சதவீத மக்களுக்கு கரோனா தடுப்பூசியின் ஒரு டோஸாவது செலுத்தப்பட்டுள்ளது. 53 சதவீத மக்களுக்கு தடுப்பூசியின் இரண்டு டோஸும் செலுத்தப்பட்டுள்ளது 

 

மேலும் கடந்த ஜனவரி மாதத்தில் நாள் ஒன்றுக்கு 10 ஆயிரம் பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில், தற்போது 200 பேருக்கு மட்டுமே தினசரி கரோனா உறுதியாகி வருகிறது. எனவே பொதுவெளியில் முகக்கவசம் அணிவது கட்டாயமில்லை என இஸ்ரேல் அறிவித்துள்ளது. ஆனால் மூடப்பட்ட இடங்களில் மாஸ்க் கட்டாயம் என்ற விதி தொடர்கிறது. திறந்த வெளியை விட, மூடப்பட்ட இடங்களிலேயே கரோனா அதிகம் பரவுமென்பது குறிப்பிடத்தக்கது.

 

பள்ளிகள், பார்கள், உணவகங்கள் ஆகியவற்றை மீண்டும் திறந்துள்ள இஸ்ரேல், தடுப்பூசி செலுத்திக்கொண்ட சுற்றுலாப் பயணிகளையும் மே மாதம் முதல், தங்கள் நாட்டிற்குள் அனுமதிக்க இருக்கிறது. முகக்கவசம் பொதுவெளியில் அணிவது கட்டாயமில்லை என அந்தநாடு அறிவித்துள்ள நிலையில், இஸ்ரேல் மக்கள் முகக்கவசம் அணியாமல் வீதிகளில் சுற்றித் திரிந்து தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.

 

 

 

சார்ந்த செய்திகள்