Skip to main content

ஐஎஸ்ஐ தலைவர் விவகாரம்: முடிவுக்கு வரும் பாக். பிரதமர் - இராணுவ தளபதி மோதல்? 

Published on 14/10/2021 | Edited on 14/10/2021

 

imran khan

 

பாகிஸ்தான் உளவு பிரிவான ஐ.எஸ்.ஐ.யின் தலைவராக ஃபைஸ் ஹமீத் இருந்துவந்தார். இந்தநிலையில், அவரின் பதவிக்காலம் நிறைவடைந்ததையொட்டி, நதீம் அகமது அஞ்சும் என்பவர் ஐஎஸ்ஐயின் புதிய தலைவராக நியமிக்கப்படுவதாக பாகிஸ்தான் இராணுவம் கடந்த வாரம் அறிவித்தது.

 

இருப்பினும் ஐ.எஸ்.ஐ. தலைவராக நதீம் அகமது அஞ்சும் என்பவர் நியமிக்கப்பட்டதற்கான அறிவிப்பு பாகிஸ்தான் பிரதமர் அலுவலகத்திலிருந்து வரவில்லை. இதனால் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கும், சக்தி வாய்ந்தவராக கருதப்படும் பாகிஸ்தானின் இராணுவ தளபதி கமர் ஜாவேத் பஜ்வாவுக்கும் ஐ.எஸ்.ஐ. தலைவரை நியமிக்கும் விவகாரத்தில் மோதல் ஏற்பட்டதாக தகவல் வெளியானது.

 

மேலும், அண்டை நாடான ஆப்கானிஸ்தானில் நிலவும் நெருக்கடியான சூழ்நிலையின் காரணமாக, தற்போது ஐ.எஸ்.ஐ. தலைவராக இருக்கும் ஃபைஸ் ஹமீதே அப்பதவியில் தொடர வேண்டும் என  இம்ரான் கான் விரும்புவதாகவும் அந்த தகவல்கள் தெரிவித்தன. இதனால் பாகிஸ்தான் அரசியல் வட்டாரங்களில் பரபரப்பு ஏற்பட்டது.

 

udanpirape

 

இந்தச் சூழ்நிலையில் பிரதமர் இம்ரான் கானும், இராணுவ தளபதி கமர் ஜாவேத் பஜ்வாவும் கடந்த திங்கட்கிழமை (11.10.2021) சந்தித்துப் பேசினர். இந்தநிலையில், பாகிஸ்தானின் தகவல்துறை அமைச்சர் ஃபவாத் சவுத்ரி, "புதிய ஐ.எஸ்.ஐ. டிஜி நியமனம் குறித்து பிரதமருக்கும் ராணுவ தளபதிக்கும் இடையிலான ஆலோசனைகள் நிறைவடைந்துவிட்டது. புதிய நியமனத்திற்கான நடைமுறை தொடங்கிவிட்டது" என தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

 

இதன்மூலம் பிரதமர் இம்ரான்கானுக்கும், இராணுவ தளபதிக்கும் இடையிலான மோதல் முடிவுக்கு வந்துள்ளதாக கருதப்படுகிறது.

 

 

சார்ந்த செய்திகள்