சீக்கிய மதத்தை தோற்றுவித்தவரான குருநானக் இன்றைய பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள நன்கானா சாகிப் என்ற இடத்தில் பிறந்தாா். அவரது பிறப்பை போற்றும் விதமாக அவர் பிறந்த இடத்தில் சீக்கியர்களுக்கான குருத்வாரா ஒன்று கட்டப்பட்டுள்ளது.
இதில் நேற்று நூற்றுக்கணக்கான யாத்திரீகர்கள் வழிபடு நடத்திக்கொண்டிருந்த போது, குருத்வாராவை முற்றுகையிட்ட ஒரு கும்பல் குருத்வாரா மீதும், அங்கிருந்த யாத்திரீகர்கள் மீதும் கற்களை கொண்டு தாக்கியுள்ளது. இதனால் வழிபாட்டிற்காக சென்ற சீக்கியர்கள் குருத்வாரா உள்ளேயே சிக்கிக்கொண்டு தவித்தனர். அந்த குருத்வாரா இருக்கும் பகுதியில் வசிப்பவர்கள் தான் இந்த முற்றுகையில் ஈடுபட்டது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்த முற்றுகைக்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
இது குறித்து இந்திய வெளியுறவுத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், “ புனித தலத்தின் மீது நடத்தப்படும் தாக்குதல்களுக்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவிக்கிறது. பாகிஸ்தான் அரசு, சீக்கிய மதத்தவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நாங்கள் வலியுறுத்துகிறோம். சீக்கியா்கள் மீது தாக்குதல் நடத்தி, சீக்கிய குருத்வாராவை அவமதித்த குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளது.