அடுத்த ஆண்டு ஜூன் மாதம் வரை வீட்டிலிருந்தே பணிபுரிய தங்களது நிறுவன ஊழியர்களுக்கு அனுமதி அளித்துள்ளது கூகுள் நிறுவனம்.
கரோனா வைரஸ் தொற்றால் ஏற்பட்டுள்ள முடக்க நிலை காரணமாக, உலகம் முழுவதும் மென்பொருள் மற்றும் தகவல் தொடர்பு துறையைச் சேர்ந்த நிறுவனங்கள், தங்களது ஊழியர்களுக்கு வீட்டிலிருந்தே பணியாற்றும் வாய்ப்பை ஏற்படுத்தித் தந்துள்ளன. கடந்த நான்கு மாதங்களாக லட்சக்கணக்கான ஐ.டி. ஊழியர்கள் இந்த முறையிலேயே பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில், பல முன்னணி நிறுவனங்களும், இதேபோன்று வீட்டிலிருந்து பணியாற்றும் முறையை அடுத்த ஆண்டு வரை தொடர்வதாக அறிவித்து வருகின்றன. அந்தவகையில் அடுத்த ஆண்டு ஜூன் மாதம் வரை வீட்டிலிருந்தே பணிபுரிய தங்களது நிறுவன ஊழியர்களுக்கு அனுமதி அளித்துள்ளது கூகுள் நிறுவனம்.
இதுதொடர்பாக தங்களது ஊழியர்களுக்குக் கூகுள் அனுப்பியுள்ள மின்னஞ்சலில், "ஊழியர்கள் தங்களின் வருங்கால செயல்பாடுகளைத் திட்டமிட்டுக் கொள்ளும் வகையில், வீட்டிலிருந்து பணியாற்ற அனுமதி நீட்டிக்கப்படுகிறது. இதன் மூலம் அலுவலகம் வந்து பணியாற்றத் தேவையில்லாத பொறுப்பில் இருக்கும் ஊழியர்கள் அனைவரும், ஜூன் 30, 2021 வரை வீட்டிலிருந்தே பணியாற்றலாம்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.