ரஃபேல் போர் விமானங்களை வாங்க போடப்பட்ட ஒப்பந்தத்தில் முறைகேடு நடந்ததாக காங்கிரஸ் கட்சி தொடர்ந்து குற்றஞ்சாட்டிவருகிறது. இதுதொடர்பாக உச்ச நீதிமன்றத்திலும் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், ரஃபேல் வழக்கில் ஊழல் நடைபெறவில்லை என கூறி வழக்கைத் தள்ளுபடி செய்தது.
இருப்பினும், சமீபத்தில் ரஃபேல் ஒப்பந்தம் தொடர்பாக இடைத்தரகருக்கு ரூ. 9 கோடி கமிஷன் கொடுக்கப்பட்டதாக ஃபிரான்ஸின் செய்தி நிறுவனம் ஒன்று தகவல் வௌியிட்டது. இதனையடுத்து, ரஃபேல் விவகாரம் மீண்டும் சூடுபிடிக்கத் தொடங்கியது. ரஃபேல் விமானங்களை இந்தியாவிற்கு உற்பத்தி செய்யும் டாசல்ட் ஏவியேஷன் நிறுவனம், ரஃபேல் ஒப்பந்தத்தில் எந்தவித முறைகேடும் நடைபெறவில்லை என விளக்கமளித்து.
இந்நிலையில் ஃபிரான்ஸ் நாட்டில், ரஃபேல் ஒப்பந்தம் தொடர்பாக எழுந்துள்ள ஊழல் குற்றச்சாட்டு குறித்து விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாக அந்த நாட்டின் இணைய ஊடகமான மீடியாபார்ட் செய்தி வெளியிட்டுள்ளது. இந்த ஒப்பந்தம் குறித்து விசாரிக்க நீதிபதி ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள மீடியாபார்ட், ஜூன் 14ஆம் தேதியே விசாரணை தொடங்கப்பட்டுவிட்டதாகவும், ஃபிரெஞ்சு பொது வழக்கு சேவைகளின் நிதிக் குற்றப்பிரிவு இதனை உறுதிசெய்துள்ளதாகவும் கூறியுள்ளது.
ரஃபேல் ஒப்பந்தம் கையெழுத்தாகும்போது அதிபராக இருந்த பிரான்சுவா ஹாலண்டின், அப்போது பொருளாதாரம் மற்றும் நிதி அமைச்சராக இருந்த தற்போதைய அதிபர் இம்மானுவேல் மக்ரோன், அப்போதைய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜீன்-யவ்ஸ் லு டிரையன் ஆகியோரின் ரஃபேல் ஒப்பந்தம் தொடர்பான நடவடிக்கைகளைப் பற்றியுள்ள கேள்விகளும் விசாரிக்கப்படும் என மீடியாபார்ட் கூறியுள்ளது.