Skip to main content

கடற்படை வீரர் முதல் எடின்பெரோ கோமகன் வரை! - இங்கிலாந்து இளவரசரின் கதை!

Published on 10/04/2021 | Edited on 10/04/2021

 

england prince philip incident his history

 

பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில் 'சூரியன் மறையாத தேசம்' எனப் பெயர் பெற்ற நாடு இங்கிலாந்து. இங்கிலாந்து நாட்டின் மகாராணியாக இரண்டாம் எலிசபெத் பதவி வகித்து வருகிறார். இவரது கணவரும், எடின்பெரோ கோமகனுமான இளவரசர் பிலிப், 99 வயதில் காலமானார். இளவரசர் பிலிப் காலமானதை, பக்கிங்காம் அரண்மனை அதிகாரப்பூர்வமாக நேற்று (09/04/2021) அறிவித்தது.

 

இங்கிலாந்து இளவரசர் பிலிப் குறித்து பார்ப்போம்!
 

கிரேக்க மற்றும் டென்மார்க் அரச குடும்ப வம்சாவளியைச் சேர்ந்தவர் இளவரசர் பிலிப். கிரீஸ் நாட்டின் கோர்பூ தீவில் 1921- ஆம் ஆண்டு பிறந்தார் இளவரசர் பிலிப். தனது 18 ஆவது வயதில் பிரிட்டிஷ் ராயல் கடற்படையில் சேர்ந்தார். அதைத் தொடர்ந்து, 1947- ஆம் ஆண்டு நவம்பர் 20- ஆம் தேதி, எலிசபெத்தை இளவரசர் பிலிப் கரம் பிடித்தார். 1953- ஆம் ஆண்டு பிரிட்டன் மாமன்னர் ஆறாம் ஜார்ஜ் மறைந்தார். 1953- ஆம் ஆண்டு இங்கிலாந்து மகாராணியாக இரண்டாம் எலிசபெத் பட்டம் சூட்டப்பட்டார். அதுமுதல் இளவரசர் பிலிப், 'எடின்பெரோ கோமகன்' என்ற அடைமொழியுடன் அழைக்கப்பட்டார். இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத்- இளவரசர் பிலிப் தம்பதிக்கு சார்லஸ் உட்பட மூன்று மகன்களும், இளவரசி ஆனி என்ற மகளும் உள்ளனர். இளவரசர் வில்லியம் உட்பட 8 பேரக்குழந்தைகளும், 10 கொள்ளுப் பேரக்குழந்தைகளும் உள்ளனர்.

 

england prince philip incident his history

 

கடந்த 2017- ஆம் ஆண்டு தனது அரச பொறுப்புகளில் இருந்து இளவரசர் பிலிப் ஓய்வு பெற்றார். ராணி இரண்டாம் எலிசபெத்தோடு, பொது நிகழ்ச்சிகளில் அரிதாகவே கலந்து கொண்டார். கடந்த சில மாதங்களாக இதயப் பிரச்சனை உள்ளிட்ட உடல் உபாதைகளால் பாதிக்கப்பட்டார். லண்டன் கிங் எட்வர்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று அண்மையில் இளவரசர் பிலிப் வீடு திரும்பினார்.

 

இங்கிலாந்தில் மீண்டும் கரோனா பாதிப்பு அதிகரித்ததால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால், லண்டன் மேற்கே உள்ள வின்ட்சர் கோட்டையில் ராணி இரண்டாம் எலிசபெத்துடன் தங்கியிருந்தார். இந்த நிலையில், வெள்ளிக்கிழமை (09/04/2021) காலை இளவரசர் பிலிப் இயற்கை எய்தியதாக பக்கிங்காம் அரண்மனை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. வரும் ஜூன் 10- ஆம் தேதியுடன் தனது 100 வது பிறந்தநாளைக் கொண்டாட இருந்த நிலையில், இளவரசர் பிலிப் காலமானார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

இங்கிலாந்து இளவரசரின் மறைவுக்கு உலக நாடுகளின் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

 

 

 

சார்ந்த செய்திகள்