உலக பணக்காரர்கள் பட்டியலில் டெஸ்லா மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனங்களின் தலைமைச்செயல் அதிகாரியான எலான் மஸ்க் மூன்றாம் இடத்திற்கு முன்னேறியுள்ளார்.
கரோனா நெருக்கடி காரணமாக உலகெங்கும் பல்வேறு நிறுவனங்கள் பொருளாதார நெருக்கடியைச் சந்தித்து வருகின்றன. நிதி நெருக்கடியைச் சமாளிக்க முடியாமல் பல முன்னணி நிறுவனங்களும் வேலையாட்கள் குறைப்பு, உற்பத்தி குறைப்பு உள்ளிட்ட நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளன. இருப்பினும், கரோனா நெருக்கடி மிகுந்த இக்காலத்தில் டெஸ்லா மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனங்களின் தலைமைச்செயல் அதிகாரியான எலான் மஸ்க் சொத்து மதிப்பு கிடுகிடுவென உயர்ந்துள்ளது.
டெஸ்லா நிறுவனப்பங்குகள் 15 சதவிகிதம் வரை உயர்ந்து புதிய உச்சத்தை தொட்டதே எலான் மஸ்கின் இந்தத் திடீர் வளர்ச்சிக்கு முக்கிய காரணமாகும். இவரது தற்போதைய சொத்து மதிப்பு 110 பில்லியன் அமெரிக்க டாலருக்கும் மேல் ஆகும்.
உலக பணக்காரர்கள் பட்டியலில் முதலிடம் வகிக்கும் அமேசான் நிறுவனர் ஜெப் பெசோஸ் சொத்து மதிப்பும் சமீபத்தில் வரலாறு காணாத உச்சத்தைத் தொட்டது குறிப்பிடத்தக்கது.