ஆஸ்திரேலியாவில் 10 ஆயிரம் ஒட்டகங்களை சுட்டுக்கொல்ல அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து ஹெலிகாப்டரில் சென்று காடுகளில் உள்ள ஒட்டகங்களை சுட்டுக்கொல்ல முடிவு செய்யப்பட்டுள்ளது. காடுகளில் ஒட்டகங்கள் அதிக நீரை குடிப்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
பருவநிலை மாற்றத்தின் காரணமாக அதிக வெப்பத்தினால் கடந்த செப்டம்பர் ஆஸ்திரேலியாவில் உருவான காட்டுத்தீ இப்போதும் எரிந்துகொண்டிருக்கிறது. இக்காட்டுத்தீயில் 50 கோடி உயிரினங்கள் தீயில் வெந்து கருகி அழிந்துவிட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில், அரசு தானாகவே 10 ஆயிரம் ஒட்டகங்களை திட்டமிட்டு அழிக்க இருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. ஒட்டகங்கள் அதிக நீரை குடிப்பதால் காடுகளில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டு, வறட்சி உருவாகிறது. வறட்சியினால் மற்ற உயிரினங்களுக்கும், மக்களுக்கும் தண்ணீர் கிடைக்காமல் இருக்கிறது. அதனால்தான் இந்த முடிவை எடுப்பதாக அந்த அரசு கூறியுள்ளது. மேலும், ஒட்டகங்களின் கழிவுகள் மூலம் அதிகளவு மீத்தேன் வாயு வெளியேறுவதாகவும், இது புவி வெப்பமயமாதலுக்கு ஒரு காரணமாக இருப்பதாகவும் கூறியும் அரசு இந்த முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
விலங்கள் நல ஆர்வலர்களின் எதிர்ப்புகளையும் மீறி அரசு தனது முடிவில் உறுதியாக இருக்கிறது. ஏற்கனவே தண்ணீரின்றி ஒட்டகங்கள் அழிந்து வரும் நிலையில் சுட்டுக்கொல்லப்போகும் செய்தி உலகமெங்கிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.