Skip to main content

2017 - சிரியா குழந்தைகளுக்கு மிகக்கொடூரமான ஆண்டு!

Published on 13/03/2018 | Edited on 13/03/2018

சிரியாவில் அரசுக்கும் கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே நடந்து கொண்டிருக்கும் தாக்குதல்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. மக்கள் குடியிருப்புகளில் பதுங்கியிருக்கும் கிளர்ச்சியாளர்களைத் தாக்க, சிரிய அரசு வான்வெளித் தாக்குதல்களைப் பயன்படுத்துகிறது. இதில் சிக்கி ஏராளமான பொதுமக்கள் குறிப்பாக குழந்தைகள் கொடூரமாக கொல்லப்படுகின்றனர்.

 

Syria

 

சிரியா மக்கள் தங்கள் வாழ்வைக் கையில் பிடித்துக் கொண்டிருக்கும் சூழலில், சர்வதேச குழந்தைகள் அமைப்பான யூனிசெஃப் இந்தப் போரினால் அந்நாட்டு குழந்தைகளுக்கு ஏற்பட்டுள்ள தாக்கங்களை விளக்கும் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறது. தொடர்ந்து எட்டாவது ஆண்டை எட்ட இருக்கும் மிகக்கொடுமையான சிரிய போர், அங்குள்ள குழந்தைகளை உளவியல் ரீதியாக பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. குறிப்பாக 2017ஆம் ஆண்டு அந்நாட்டு குழந்தைகளுக்கு மிகக்கொடூரமான ஆண்டு; அதற்கு முந்தைய ஆண்டோடு ஒப்பிடும்போது குழந்தைகளின் இறப்பு விகிதம் 50% அதிகரித்துள்ளது. அதாவது அந்த ஆண்டில் 910 குழந்தைகள் கொல்லப்பட்டுள்ளனர். மேலும், 2015ஆம் ஆண்டோடு ஒப்பிடும்போது, கிளர்ச்சிக் குழுக்களில் இணைந்துகொண்ட குழந்தைகளின் எண்ணிக்கை மும்மடங்காக அதிகரித்திருக்கிறது. 

 

Syria

 

2018ஆம் ஆண்டைப் பொருத்தவரை, அதன் தொடக்கத்தில் இருந்தே சிரிய மக்கள் நரக வேதனையைச் சந்தித்து வருகின்றனர். இந்தப் போரின் தாக்கங்களைத் தாங்கிக்கொள்ள முடியாமல், நாளொன்றுக்கு சராசரியாக 6,550 பேர் அகதிகளாக வெளியேறுகின்றனர். ‘குழந்தைகளுக்குள் மற்றும் குழந்தைகளின் மீது ஏற்பட்டிருக்கும் இந்த வடுக்களை ஒருபோதும் அழிக்கவே முடியாது என யூனிசெஃப் இயக்குனர் கிரீட் காப்பலேர் தெரிவித்திருக்கிறார்.

சார்ந்த செய்திகள்

Next Story

கண்மூடித்தனமான துப்பாக்கிச் சூடு; 70 பேர் உயிரிழப்பு

Published on 23/03/2024 | Edited on 23/03/2024
 Indiscriminate shooting; 70 people lost their lives

ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 70 பேர் உயிரிழந்தது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த தாக்குதல் சம்பவத்திற்கு ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பு  பொறுப்பேற்றுள்ளது. உலக அளவில் பல்வேறு நாடுகளில் இருந்து இந்த தாக்குதல் சம்பவத்திற்கு கண்டனங்கள் குவிந்து வருகிறது.

ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் உள்ள இசை நிகழ்ச்சி அரங்கில் எதிர்பாராதவிதமாக பயங்கர ஆயுதங்களுடன் நுழைந்த கும்பல் அங்கிருந்த மக்களை நோக்கி துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்டது. இந்த கண்மூடித்தனமான துப்பாக்கிச் சூடு தாக்குதலில் 70 பேர் உயிரிழந்துள்ளனர். 140க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். இதற்கு உலக தலைவர்கள் பலரும் கண்டனங்களை தெரிவித்து வரும் நிலையில், பிரதமர் மோடி எக்ஸ் சமூக வலைதளத்தின் வாயிலாக இந்த தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். 'இந்த துயரமான நேரத்தில் ரஷ்ய கூட்டமைப்பின் அரசாங்கத்திற்கு இந்திய அரசும், இந்திய மக்களும் துணை நிற்போம்' எனத் தெரிவித்துள்ளார்.

 

Next Story

“3ஆம் உலகப்போர் உருவாகும்...” - ரஷ்ய அதிபர் எச்சரிக்கை

Published on 18/03/2024 | Edited on 18/03/2024
 Russian president warns about World War 3

உக்ரைன் - ரஷ்யா இடையே, கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக போர் நீடித்து வருகிறது.  இதில், உக்ரைனை நிலம், நீர் உள்ளிட்ட பகுதிகளில் சூழ்ந்து கொண்டு மீண்டும் ரஷ்யா தீவிர தாக்குதலை தொடுத்து வருகிறது. இந்த போரை முடிவுக்கு கொண்டு வர பல்வேறு நாடுகள் முயன்றும், போர் நின்றபாடில்லை. அதே வேளையில், உக்ரைனுக்கு அமெரிக்கா தொடர்ந்து போர் ஆயுதங்களை வழங்கி வருவதாக ரஷ்யா தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறது. இந்த நிலையில், மூன்றாம் உலகப் போர் உருவாகும் சூழல் வரும் என்று ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ரஷ்யாவில் 6 ஆண்டுகளுக்கு பிறகு ஒரு முறை அதிபர் தேர்தல் நடத்தப்படுகிறது. அந்த வகையில், ரஷ்ய அதிபரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல், கடந்த மார்ச் 15ஆம் தேதி முதல் 17ஆம் தேதி வரை நடைபெற்றது. இந்த தேர்தலில், ரஷ்ய கம்யூனிஸ்ட் கட்சி, தேசிய சுதந்திர ஜனநாயகக் கட்சி, புதிய மக்கள் கட்சி ஆகியவை களம் கண்டன. ரஷ்ய வரலாற்றில் முதல்முறையாக நடைபெற்ற 3 நாட்கள் வாக்குப்பதிவில், 3வது முறையாக அதிபர் தேர்தலில் புதின் மாபெரும் வெற்றி பெற்றுள்ளார். ஸ்டாலினுக்கு பிறகு தொடர்ச்சியாக 3வது முறையாக வெற்றி பெற்ற புதின், 200 ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும் ஒரு சாதனையை படைத்துள்ளார். 

அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றிருக்கும், புதின் பேசியதாவது, “அமெரிக்க தலைமையிலான நேட்டோ படைகளும், ரஷ்யாவும் நேருக்கு நேர் மோதிக்கொள்வது என்பது முழு அளவிலான மூன்றாம் உலகப் போரை நோக்கி ஒரு படி தொலைவில் இருக்கும் என அர்த்தம். இது அனைவருக்கும் தெளிவாகத் தெரிகிறது. ஆனால், அத்தகைய சூழலை யாரும் விரும்பவில்லை. அதே நேரத்தில், இந்த நவீன உலகில் எல்லாம் சாத்தியமே. உக்ரைனில் ஏற்கனவே, நேட்டோ இராணுவ வீரர்கள் உள்ளனர். அவர்களில் ஆங்கிலம் பேசும் வீரர்களும், பிரஞ்சு பேசும் வீரர்களும் உள்ளனர். அவர்கள் அங்கு அதிக எண்ணிக்கையில் இறந்து கொண்டிருக்கிறார்கள். சம்பந்தப்பட்ட நாடுகள் தங்கள் வீரர்களை திரும்பப் பெறுவது நலம்” என்று கூறினார். 

முன்னதாக தேர்தல் பரப்புரையின் போது, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், அங்குள்ள தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர், “இங்கே எல்லாம் அணுசக்தி மோதல் வருவதாக நான் நினைக்கவில்லை. உக்ரைன் மீதும் அணு ஆயுதங்களைப் பயன்படுத்த வேண்டிய அவசியம் இல்லை. உக்ரைனுடனான பேச்சுவார்த்தைகளுக்கு ரஷ்யா தயாராக உள்ளது. ஆனால், அவை யதார்த்தத்தை அடிப்படையாகக் கொண்டிருக்க வேண்டும். அதே வேளையில், ராணுவ தொழில்நுட்பக் கண்ணோட்டத்தில் சிந்தித்தால், நாங்கள் நிச்சயமாக தயாராக இருக்கிறோம். 

அணு ஆயுத போரைத் தூண்டும் வகையில் எந்த ஒரு செயலிலும் அமெரிக்கா ஈடுபடாது என்று நம்புகிறோம். மேலும், அமெரிக்கா தனது ராணுவப் படைகளை ரஷ்ய எல்லையில் அல்லது உக்ரைனுக்கு அனுப்பினால், ரஷ்யா இந்த நடவடிக்கையில் ஈடுபடும் என்பதை அமெரிக்கா புரிந்து கொள்ளும். ஒருவேளை, அமெரிக்கா ஆணு ஆயுத சோதனை நடத்தினால், அதற்கு நாங்களும் தயாராக இருக்கிறோம்” என்று கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.