Skip to main content

தாலியை பறித்து விரட்டிய கொடுமை; அவமானம் தாங்காமல் இளம்பெண் எடுத்த விபரீத முடிவு

Published on 22/11/2023 | Edited on 22/11/2023

 

the young woman took a tragic decision for taking away the thali in virudhunagar

 

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் மாரீஸ்வரி (20). இவர் பிளஸ் 2 வகுப்பு படித்த போது தென்காசி மாவட்டம் தேவிப்பட்டினத்தை சேர்ந்த சசிகுமார் (20) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இவர்களுக்குள் ஏற்பட்ட பழக்கம் நாளடைவில் காதலாக மாறியுள்ளது. இந்த நிலையில், சில நாட்களுக்கு முன்பு, தீபாவளி பண்டிகையை கொண்டாடுவதற்காக சசிகுமார், மாரீஸ்வரியை அழைத்து கொண்டு இரு சக்கர வாகனத்தில் கொடைக்கானலுக்கு சென்றுள்ளார். மேலும், அங்குள்ள ஒரு கோவிலில் முன், சசிகுமார் மாரீஸ்வரிக்கு தாலி கட்டியுள்ளதாகக் கூறப்படுகிறது. 

 

இதையடுத்து, கொடைக்கானலில் இருந்து திரும்பிய இருவரும் தென்காசி மாவட்டத்திற்கு வந்துள்ளனர். அதனை தொடர்ந்து, சசிகுமார் தனது சித்தி முனியம்மாள் வீட்டில் மாரீஸ்வரியை விட்டுவிட்டு, அவர் மட்டும் தனது வீட்டிற்கு வந்துள்ளார். பின்னர், கொடைக்கானலில் திருமணம் செய்து கொண்ட விபரத்தை சசிகுமார் தனது பெற்றோரிடம் கூறியுள்ளார். ஆனால், அவர்கள் சசிகுமாரின் காதல் திருமணத்தை ஏற்கவில்லை.  உடனடியாக சசிகுமார் குடும்பத்தினர், முனியம்மாளை தொடர்பு கொண்டு மாரீஸ்வரியை வீட்டை விட்டு வெளியே அனுப்புமாறு கூறியுள்ளனர். 

 

அதனை கேட்ட முனியம்மாள், மாரீஸ்வரியை மிரட்டி அவரது கழுத்தில் உள்ள தாலியை பறித்து வீசியதுடன் வெளியே தள்ளியதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, மாரீஸ்வரி சோழபுரத்தில் உள்ள தனது வீட்டிற்கு சென்றுள்ளார். அங்கு சென்ற அவர், அவமானம் தாங்காமல் பூச்சிமருந்தை குடித்துள்ளார். இதை அறிந்த மாரீஸ்வரியின் உறவினர்கள், மாரீஸ்வரியை மீட்டு ராஜபாளையம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். தற்போது அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

 

இதையறிந்த தளவாய்புரம் காவல்துறையினர் இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வந்தனர். அந்த விசாரணையில், அந்த பெண்ணை மிரட்டி தாலியை அறுத்து வீசி அவமானப்படுத்தியது முனியம்மாள் என்பது தெரியவந்தது. இதையடுத்து, முனியம்மாள் மீது வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

 

 

 

சார்ந்த செய்திகள்