Skip to main content

''எனது முதல் படத்தில் நீங்களும்;உங்களது கடைசி படத்தில் நானும்''-நடிகர் சூர்யா உருக்கம்!

Published on 30/04/2021 | Edited on 01/05/2021

 

'' You in my first film; me in your last film '' - Actor Surya

 

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநரான கே.வி.ஆனந்த், இன்று (30.04.2021) அதிகாலை மாரடைப்பு காரணமாக மரணமடைந்தார். உடல் நலக்குறைவு காரணமாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், இந்த துயர சம்பவமானது நிகழ்ந்துள்ளது. நகைச்சுவை நடிகர் விவேக் மரணம் ஏற்படுத்திய ரணம் ஆறுவதற்குள் இயக்குநர் கே.வி.ஆனந்தின் மரணச் செய்தி பேரிடியாக இறங்கி, தமிழ் சினிமா ரசிகர்களை அதிர்ச்சிக்கும் ஆழ்ந்த துயரத்திற்கும் உள்ளாக்கியுள்ளது. 

 

பத்திரிகையாளராக தன்னுடைய பயணத்தைத் தொடங்கி, ஒளிப்பதிவாளராக சினிமாவில் அறிமுகமாகி, ரசிகர்களின் விருப்பத்திற்குரிய இயக்குநராக பரிணமித்த கே.வி.ஆனந்தின் மறைவு திரையுலகத்தை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. அவரது மறைவுக்கு அவருடன் பணியாற்றிய திரைக்கலைஞர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். 

 

இந்நிலையில் அவருடன் பல படங்களில் பணியாற்றிய நடிகர் சூர்யா கே.வி.ஆனந்தின் மறைவிற்கு உருக்கமான கடிதம் ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த கடிதத்தில், ''கே.வி ஆனந்த் சார்... இது பேரிடர் காலம் என்பதை உங்கள் மரணம் அறைந்து நினைவூட்டுகிறது. நீங்கள் இல்லை என்கின்ற உண்மை மனமெங்கும் அதிர்வையும், வலியையும் உண்டாக்குகிறது. ஏற்கமுடியாத உங்கள் இழப்பின் துயரத்தில் மறக்க முடியாத நினைவுகள் அலை அலையாக உயிர்த்தெழுகின்றன.

 

'' You in my first film; me in your last film '' - Actor Surya

 

நீங்கள் எடுத்த புகைப்படங்களில் தான் 'சரவணன் சூர்யாவாக' மாறிய அந்த அற்புத தருணம் நிகழ்ந்தது. முன்பின் அறிமுகம் இல்லாத ஒருவனை சரியான கோணத்தில் படம் பிடித்து விட வேண்டும் என இரண்டு மணி நேரம் நீங்கள் கொட்டிய உழைப்பை இப்போதும் வியந்து பார்க்கிறேன். 'மெட்ராஸ் டாக்கீஸ்' அலுவலகத்தில் அந்த இரண்டு மணி நேரம் ஒரு போர்க்களத்தில் நிற்பதைப் போல உணர்ந்தேன். 'நேருக்குநேர்' திரைப்படத்திற்காக நீங்கள் என்னை எடுத்த அந்த 'ரஷ்யன் ஆங்கிள்' புகைப்படம் தான் இயக்குனர் வசந்த், தயாரிப்பாளர் மணிரத்னம் உள்ளிட்ட அனைவருக்கும் என் மீது நம்பிக்கை வர முக்கிய காரணம். புகைப்படத்தை விட பத்தாயிரம் மடங்கு பெரியதாக முகம் தோன்றும் வெள்ளித்திரையிலும் நடிகனாக என்னை படம் பிடித்ததும் நீங்கள்தான்.

 

முதன் முதலில் என் மீது பட்ட வெளிச்சம் உங்கள் கேமராவில் இருந்து வெளிப்பட்டது. அதன் மூலம் தான் என் எதிர்காலம் பிரகாசமானது. என்னுடைய திரையுலக பயணத்தில் உங்களின் பங்களிப்பும் வழிகாட்டலும் மறக்கமுடியாதது. 'வளர்ச்சிக்கு இதையெல்லாம் மாற்றிக்கொள்ள வேண்டும்' என அன்புடன், அக்கறையுடன் சொன்ன வார்த்தைகள் இப்போதும் என்னை வழிநடத்துகின்றன. இயக்குனராக 'அயன்' படத்திற்கு நீங்கள் உழைத்த உழைப்பு ஒரு மாபெரும் வெற்றிக்காக காத்திருந்த எனக்குள் புதிய உத்வேகத்தை அளித்தது. 'அயன்' திரைப்படத்தின் வெற்றி அனைவருக்கும் பிடித்த நட்சத்திரமாக என்னை உயர்த்தியது என்பதை நன்றியுடன் நினைத்துப் பார்க்கிறேன். எனது முதல் திரைப்படத்தில் நீங்களும், உங்கள் கடைசி திரைப்படத்தில் நானும் பணியாற்றியது இயற்கை செய்த முரண். வாழ்வில் எங்கள் நினைவில் என்றும் நீங்கள் வாழ்வீர்கள் சார்... இதயபூர்வமான நன்றி அஞ்சலி..'' எனத்தெரிவித்துள்ளார்.

 

 

 

 

சார்ந்த செய்திகள்