Skip to main content

நேற்று தந்தை முதல்வர்! நாளை மகன் மத்திய அமைச்சர்! -ரவீந்திரநாத்குமாரின் குலதெய்வ நம்பிக்கை!

Published on 22/03/2019 | Edited on 22/03/2019

எந்த ஒரு காரியமானாலும் ஸ்ரீவில்லிபுத்தூர் – செண்பகத்தோப்பில் உள்ள குலதெய்வம் வனப்பேச்சி அம்மனை வணங்கிவிட்டுத்தான் தொடங்குவார் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம். தான் மூன்று முறை முதலமைச்சர் ஆனதற்குத் தன்னுடைய குலதெய்வமே முழுமுதல் காரணம் என, தன்னுடைய ஆழ்ந்த நம்பிக்கையை குடும்பத்தினரிடம் பகிர்வார். 

 

ops son

 

தந்தை வழியிலேயே, மகன் ரவீந்திரநாத்குமாரும் தேனியில் வேட்புமனு தாக்கல் செய்வதற்கு முன்பாக, இன்று காலை 6-45 மணிக்கெல்லாம் வாகனங்கள் அணிவகுத்திட குலதெய்வம் கோவிலுக்கு வந்தார்.  தன்னுடைய வேட்புமனுவை குலதெய்வத்தின் முன்வைத்து வழிபட்டார். பூஜை நடந்தபோது, குலதெய்வம் முன்பாக சம்மணமிட்டு தரையில் அமர்ந்திருந்தவர், மந்திரங்கள் சொல்லச் சொல்ல, உடலில் முன்னும் பின்னுமாக  ‘ஜெர்க்’ கொடுத்தபடி, தலையையும் அதற்கேற்றவாறு ஆட்டினார்.    அக்கோவிலில் இருந்த ஒவ்வொரு சாமி சிலையையும் பயபக்தியுடன் கும்பிட்டார்.  அதனைத் தொடர்ந்து, ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீஆண்டாள் கோவிலுக்கும் ரவீந்திரநாத்குமார் சென்றார்.  ஓ.பி.எஸ்.ஸும் அவரது குடும்பத்தினரும் ஏனோ மிஸ்ஸிங்.

 

 

செய்தியாளர்களிடம் ரவீந்திரநாத்குமார் “தேனி பாராளுமன்ற தொகுதி மட்டுமல்ல. தமிழகத்தில் இருக்கின்ற, பாண்டிச்சேரி உட்பட 40 நாடாளுமன்ற தொகுதிகளிலும் அதிமுக வெற்றிக்கூட்டணி மகத்தான வெற்றியைப் பெறும் என்பதை இந்த நல்ல நேரத்தில் தெரிவித்துக்கொள்கிறேன். இன்றைக்கு 2 அல்லது 3 மணிக்கு வேட்பு மனு தாக்கல் செய்யவிருக்கிறேன். என்னை எதிர்த்துப் போட்டியிடும் வேட்பாளர் யாராக இருந்தாலும் எனக்குக் கவலையில்லை. எங்களது பிரச்சார யுக்திகள் அதற்குப் பதில் சொல்லும்.” என்றவர்,  ‘தங்கத்தமிழ்ச் செல்வனுக்கு தேனி தொகுதியில் செல்வாக்கு இருப்பதாகச் சொல்லப்படுகிறதே?’ என்ற  கேள்விக்கு  “மக்கள் பதில் சொல்வார்கள்.” என்று சிரித்தார். 

 

ஓ.பி.எஸ். பூர்விக ஊரான ஸ்ரீவில்லிபுத்தூரில் அவருடைய உறவுக்காரர் ஒருவரிடமிருந்து  வெளிப்பட்ட நம்பிக்கை வார்த்தைகள் இவை –

 

“வெற்றிபெற்று எம்.பி. ஆகி, மத்திய அமைச்சர் ஆகிவிடுவார் ரவீந்திரநாத்குமார். குலதெய்வம் அதற்குத் துணை நிற்கும்.” 

ஸ்ரீவில்லிபுத்தூரிலிருந்து கிளம்பிய ரவீந்திரநாத்குமார்,  தேனி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்திருக்கிறார். 

 

 

சார்ந்த செய்திகள்