எஸ்பிஐ என்னும் சத்தியம் சினிமாஸின் 71.7% பங்குகளை பி.வி.ஆர். சினிமாஸ் தன்வசமாக்கப் போகிறது. சத்தியம் சினிமாஸ் தமிழகம், ஆந்திரா, தெலுங்கானா, கேரளா, மும்பை என மொத்தம் 76 திரைகளுடன் 10 நகரங்களில் இருக்கிறது. தமிழகத்தில் சத்தியம், எஸ்கேப், எஸ்2 ஆகிய பெயர்களுடன் சத்தியம் சினிமாஸ் இயங்கிக் கொண்டிருக்கிறது.
இதன் 71.7% பங்குகளை அதாவது 2,22,711 பங்குகளை 6.33 கோடி ரூபாய்க்கும், இதை தவிர 1.6 மில்லியன் பங்குகளை தலா ஒரு பங்கு 1,371.2 ரூபாயென, 2.1 மில்லியன் ரூபாய் கொடுத்ததும் வாங்கியுள்ளனர். சத்யம் சினிமாஸை மொத்தம் 850 கோடி ரூபாய்க்கு வாங்கவுள்ளதாக பி.வி.ஆர். சினிமாஸ் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து பி.வி.ஆர் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் அஜய் பிஜிலி "2020க்குள் 1,000 திரை என்னும் இலக்கை நோக்கி நகர்வதற்கான வேலைகளில் இதுவும் ஒன்று" என்று தெரிவித்தார்.
இன்னும் 30 நாட்களில் பணப் பரிவர்த்தணைகளும், 9 முதல் 12 மாதங்களில் இணைப்பு நடவடிக்கைகளும் முடியும் என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த இணைப்பின் மூலம் பி.வி.ஆர். 60 நகரங்களில், 706 திரைகளுடன் உலக அளவில் 7ஆவது இடத்திற்கு முன்னேறும் என்பது குறிப்பிடத்தக்கது.