Skip to main content

கருக்கலைப்பால் இறந்த பெண்! மூன்று மாதங்கள் கழித்துச் சிக்கிய மருந்துக் கடை உரிமையாளர்!

Published on 06/07/2022 | Edited on 06/07/2022

 

Woman passed away case police arrested medical shop owner

 

பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை அருகே உள்ள மேட்டுப்பாளையத்தைச் சேர்ந்தவர் வேல்முருகன், அனிதா தம்பதி. இந்தத் தம்பதிக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் அனிதா மீண்டும் கருவுற்றார். அப்போது, மூன்றாவது குழந்தையும் பெண் குழந்தையாக இருக்குமோ என்று சந்தேகத்தின் பேரில் அவர்கள் கருவை கலைக்க முடிவு செய்தனர்.

 

அதற்காக கடலூர் மாவட்டம், ராமநத்தம் பகுதியில் உள்ள மருந்துக்கடை உரிமையாளர் முருகன் என்பவரை அணுகியுள்ளனர். அப்போது அனிதாவுக்கு, முருகன் தன் மெடிக்கல் கடையில் வைத்து கருக்கலைப்பு மாத்திரை கொடுத்துள்ளார். இதில் அனிதா உடல் நிலை மிகமோசமாக பாதிக்கப்பட்டு ரத்தப்போக்கு ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து அவரை பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற சிகிச்சை அளித்தனர். ஆனால், சிகிச்சைப் பலனின்றி அனிதா கடந்த மே மாதம் 6ம் தேதி பரிதாபமாக இறந்தார். 

 

அதனைத் தொடர்ந்து அனிதாவின் தாய் செல்வி, ராமநத்தம் காவல்துறையிடம் புகார் அளித்தார். அந்தப் புகாரை ஏற்ற காவல்துறையினர் அனிதா இறப்புக்கு காரணமான மருந்துக்கடை உரிமையாளர் முருகன் மற்றும் அவரது மருத்துவ உதவியாளர்கள் மீது வழக்குப் பதிவு செய்தனர். இந்த நிலையில், முருகன் தலைமறைவானார். இவரை காவல்துறையினர் கடந்த மூன்று மாதமாக தீவிரமாக தேடிவந்தனர். 

 

இந்நிலையில், நேற்று ராமனநத்தத்தில் உள்ள வாடகை வீட்டிற்கு முருகன் வந்தார். அந்த வீட்டின் அருகே கண்காணிப்பு பணியிலிருந்த காவலர்கள் இந்தத் தகவலை ராமநத்தம் காவல்நிலையத்திற்கு தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து, இன்ஸ்பெக்டர் ஜெயகீர்த்தி தலைமையிலான போலீஸார் அங்கு விரைந்து முருகனை மடக்கி பிடித்து கைது செய்தனர். கைது செய்யப்பட்ட முருகனை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, நீதிமன்ற உத்தரவின்படி சிறையில் அடைத்துள்ளனர்.

 

 

சார்ந்த செய்திகள்