Skip to main content

மதுவுக்கு எதிராக மாணவர் தற்கொலை இனியாவது அரசு திருந்துமா?- அன்புமணி ராமதாஸ்

Published on 02/05/2018 | Edited on 02/05/2018

பாட்டாளி மக்கள் கட்சி இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் டாஸ்மாக்கிற்கு எதிராக நெல்லை மாணவனின் தற்கொலை குறித்து அறிக்கை வெளியிட்டுள்ளார் அந்த அறிக்கையில்.

 

நெல்லை மாவட்டம் குருக்கள்பட்டியைச் சேர்ந்த மாடசாமி மீட்க முடியாத அளவுக்கு மதுப்பழக்கத்திற்கு ஆளாகியிருந்தார். இதனால் அவரது குடும்பம் சீரழிவுப் பாதையில் சென்று கொண்டிருந்தது. மாடசாமியின் மதுப்பழக்கத்தால் குடும்பத்தின் நிம்மதி, பொருளாதாரம், கல்வி உள்ளிட்டவை பாதிக்கப்பட்டது. இதற்குக் காரணமான மதுப்பழக்கத்தை கைவிடும்படி மாடசாமியிடம், 12-ஆம் வகுப்பு முடித்து மருத்துவப் படிப்பு படிக்க ஆயத்தமாகி வரும் அவரது மகன் தினேஷ் மன்றாடியிருக்கிறார். ஆனால், அதை அவரது தந்தை பொருட்படுத்தாததால் மனம் உடைந்த மாணவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கிறார். சமூகத்தையும், குடும்பத்தையும் காப்பாற்ற வேண்டிய ஒரு உயிர் மதுவின் தீமையால் பறிபோயிருக்கிறது. மாணவன் தினேஷின் தற்கொலைக்கு அவரது தந்தை மாடசாமி மட்டும் காரணமல்ல; தெருவுக்குத் தெரு மதுக்கடைகளை  திறந்து லட்சக்கணக்கான குடும்பங்களை சீரழித்து வரும் எடப்பாடி பழனிச்சாமியும் தான் பொறுப்பேற்க வேண்டும்.  பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும்.

 

ramadas


 

தினேஷின் சட்டைப்பையிலிருந்து கைப்பற்றப்பட்ட தற்கொலை கடிதத்தில் தந்தையின் குடிப்பழக்கத்தால் தான் தாம் தற்கொலை செய்து கொள்வதாக குறிப்பிடப்பட்டுள்ளது. தமது இறுதிச் சடங்கில் தந்தை மாடசாமி கலந்து கொள்ளக்கூடாது என்று மாணவர் தினேஷ் குறிப்பிட்டிருக்கிறார். தமது தற்கொலைக்கு பிறகாவது  தமிழகத்திலுள்ள மதுக்கடைகளை மூட வேண்டும் என்றும் அவர் மன்றாடியிருக்கிறார். மாணவர் தினேஷிடமிருந்து நீட் தேர்வில் பங்கேற்பதற்கான நுழைவுச்சீட்டு கைப்பற்றப்பட்டிருக்கிறது. மருத்துவம் படித்து சமூகத்திற்கு சேவை செய்திருக்க வேண்டிய ஒரு மாணவனின் உயிர் மதுவால் ஏற்பட்ட குடும்பச்சீரழிவு காரணமாக தற்கொலை செய்து கொண்டிருப்பது இதயத்தை காயப்படுத்துகிறது. மாணவனின் தற்கொலை மதுவுக்கு எதிராக மிகப்பெரிய எழுச்சியை ஏற்படுத்தும் என்றாலும் கூட, தற்கொலை போன்ற செயல்களை ஏற்றுக்கொள்ள முடியாது. எந்த சிக்கலுக்கும் தற்கொலை தீர்வல்ல.

 

ஆனால், தமிழக ஆட்சியாளர்களுக்கு இதைப்பற்றியெல்லாம்  எந்த அக்கறையும் இல்லை. மக்களுக்கு மதுவைக் கொடுத்து சிந்திக்கும் திறனற்றவர்களாக மாற்றுவது; வாழ்க்கையில் முன்னேறாமல் மது அருந்த ரூ.100 அல்லது ரூ.200 கிடைக்காதா? என்று ஏங்கும் நிலையிலேயே வைத்திருப்பது; அத்தகைய சூழலைப் பயன்படுத்தி ஓட்டுக்கு ரூ.100 அல்லது ரூ.200 கொடுத்து வாக்குகளை வாங்கி தேர்தலில் வெற்றி பெறுவது என்பது தான் இந்நாள் ஆட்சியாளர்களுக்கும், முன்னாள் ஆட்சியாளர்களுக்கும் கொள்கையாக உள்ளது. தமிழகம் சந்திக்கும் அனைத்து சீரழிவுகளுக்கும் இது தான் காரணம் ஆகும்.

 

மாணவர் தினேஷின் தற்கொலை ஆட்சியாளர்களின் மனசாட்சியை தட்டி எழுப்ப வேண்டும். இனியும் தாமதிக்காமல் தமிழகத்தில் முழு மதுவிலக்கை நடைமுறைப்படுத்த வேண்டும். அரசின் முடிவுக்காக  காத்திருக்காமல், மதுவிலக்கு நடைமுறையானால் மது ஆலைகள் தானாக மூடப்பட்டு விடும் என்று வெட்டி வாதங்களைப் பேசிக்கொண்டிருக்காமல் திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளைச் சேர்ந்தவர்களால் நடத்தப்படும் மது ஆலைகளை உடனே மூட அக்கட்சிகளின் தலைமைகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

சார்ந்த செய்திகள்