Skip to main content

ஒரு கேள்விக்கே இவ்வளவு கோபப்படுவதுதான் ஆன்மீக அரசியலா? தெஹ்லான் பாகவி

Published on 01/06/2018 | Edited on 01/06/2018

 

asd


எஸ்.டி.பி.ஐ. கட்சியின்  மாநில தலைவர் கே.கே.எஸ்.எம். தெஹ்லான் பாகவி  தூத்துக்குடி விவகாரத்தில் ரஜினிகாந்தின் கருத்து குறித்து கூறியதாவது:-

’’நடிகர் ரஜினிகாந்த்  தூத்துக்குடிக்கு சென்று அங்கே பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து ஆறுதல் கூற செல்கிறார் என்றவுடன் இத்துனை நாட்களுக்கு பிறகாவது அவர் தூத்துக்குடிக்கு செல்கிறாரே பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்க செல்கிறாரே என்ற நல்லெண்ணம் தான் எல்லோருக்கும் இருந்தது. ஆனால், அவர் அங்கு சென்று வந்ததற்கு பிறகு அவரின் நடவடிக்கைகள் மற்றும் பேச்சு, பேட்டி இதையெல்லாம் பார்க்கும் போது அவர் ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகத்தின் தூதுவராகத்தான் தூத்துக்குடிக்கு சென்று வந்திருக்கிறார் அல்லது காவல்துறை மற்றும் பாஜகவின் தூதுவராகத்தான் அவர் தூத்துக்குடிக்கு சென்று வந்திருக்கிறார் என்பது அப்பட்டமாக அவரது பேச்சுகளில் இருந்து நம்மால் தெரிந்து கொள்ள முடிகிறது.

அங்கே அவர் மக்களை சந்தித்து ஆறுதல் கூற சென்றபோது ஒரு இளைஞர் நீங்கள் யார் என்ற கேள்வியை எழுப்பினார். அந்த இளைஞர் சரியான கேள்வியை சரியான நேரத்தில் அங்கே இருக்கும் பாதிக்கப்பட்ட மக்கள் கேட்டிருக்கிறார்கள் என்பதை அந்த கேள்வி உண்மையிலேயே மிகவும் வரவேற்கத்தகுந்த கேள்வி என்பதனை நம்மால் இப்போது புரிந்து கொள்ள முடிகிறது. ஏன் என்றால் அந்த அளவிற்கு மிக மோசமாக அங்கே நடைபெற்ற போராட்டத்தை நடிகர் ரஜினிகாந்த்  வார்த்தைகளால் விமர்சித்துள்ளார். மக்களுக்காக நடைபெற்ற போராட்டத்தையும், போராளிகளையும் இவ்வளவு மோசமாக யாரும் விமர்சிக்க முடியாது என்ற அளவிற்கு நடிகர் ரஜினிகாந்த் அவர்கள் அரசு, காவல்துறை மற்றும் பாஜவின் ஊதுகுழலாக செயல்பட்டு பேசியிருப்பதை மிக வன்மையாக எஸ்.டி.பி.ஐ சார்பாக கண்டிக்கிறேன்.

 

 

 

போராடிய மக்களை பார்த்து சமூக விரோதிகள் என்று சொல்லும் தகுதி நடிகர் ரஜினிகாந்திற்கு இருக்கிறதா என்று நாங்கள் கேட்கிறோம். போராடும் மக்கள் மற்றும் போராளிகள் எதற்கு போராடுகிறார்கள். அழிவுத்திட்டங்கள் தமிழ்நாட்டிற்கு வரக்கூடாது என்று போராடுகிறார்கள். ஹைட்ரோ கார்பனால் விவசாய நிலங்கள் அழிந்து விடக்கூடாது என்பதற்காக போராடுகிறார்கள். காவிரி நீர் தமிழ்நாட்டிற்கு வரவேண்டும் என்று போராடுகிறார்கள். பெட்ரோலிய மண்டலமாக விவசாய நிலங்களை உள்ளடக்கிய டெல்டா பகுதிகள் ஆகிவிடக்கூடாது என்பதற்காக போராடுகிறார்கள். தமிழகத்தில் இருந்து மதுவிலக்கை பூரணமாக ஒழிக்க வேண்டும் என்பதற்காக போராடுகிறார்கள். தமிழ்நாட்டில் நடைபெறும் போராட்டங்கள் அனைத்தும் சரியான காரணங்களுக்காக மக்களுக்காக தமிழகத்தின் எதிர்காலத்திற்காக, தமிநாட்டின் இயற்கை வளங்களையும் சுற்றுச்சூழலையும் பாதுகாப்பதற்காக நடைபெறும் போராட்டங்கள். இந்த போராட்டங்களை கொச்சைப்படுத்துவதற்கு ரஜினிகாந்திற்கு என்ன தகுதி இருக்கிறது என்று கேட்கிறேன்.

 

கோடி கோடியாக சம்பாதித்து கொண்டிருந்த காலகட்டத்தில் என்றாவது அவர் தமிழ்நாட்டின் உரிமைகளுக்காக போராட்டம் நடத்தி இருப்பாரா? விலைவாசி உயர்வுகளுக்கு எதிராக போராடி இருப்பாரா? மத்திய, மாநில அரசுகளின் தவறான செயல்பாடுகளுக்கு எதிராக வீதிகளில் இறங்கி இருப்பாரா? பாதிக்கப்பட்ட மக்களை கடந்த காலங்களில் என்றாவது சென்று சந்தித்திருப்பாரா?   தண்ணீர் இல்லாமலும் விவசாயம் பொய்த்துப்போகியும் 250க்கும் மேற்பட்ட விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டார்களே, 500க்கும் மேற்பட்ட மீனவர்கள் தமிழகத்தில் தற்கொலை செய்து கொண்டார்களே அப்போதெல்லாம் இந்த ரஜினிகாந்த் எங்கே போனார். போராளிகளையும், போராட்டக்காரர்களையும், போராட்டங்களையும் கொச்சைப்படுத்தி பேசுகிறாரே அந்த போராட்டங்களையும், போராளிகளையும் குறித்து பேசுவதற்கு ஒரு தகுதி வேண்டும். நடிகர் ரஜினிகாந்திற்கு அந்த தகுதி இல்லை என்று நாங்கள் சொல்கிறோம். தொடர்ந்து போராட்டங்கள் தமிழகத்தில் நடைபெற்றால் தமிழ்நாடு சுடுகாடாகிவிடும் என்று பேசுகிறார். பல்வேறு மாநிலங்கள் ஒதுக்கித்தள்ளிய மக்கள் அழிவுத்திட்டங்கள் மூலமாக தமிழ்நாட்டை சுடுகாடாக தமிழக அரசும் மத்திய அரசும் மாற்றிக்கொண்டிருக்கிறார்கள். அதனை எதிர்த்துதான் மக்கள் போராடுகிறார்கள். தூத்துக்குடியில் 100 நாட்கள் போராட்டத்தின் போது நடிகர் ரஜினிகாந்த் எங்கே போனார். அந்த இளைஞர்கள் கேட்ட கேள்வியை நாங்கள் கேட்க வேண்டிய தேவை இருக்கிறது. எனவே, மக்களின் வாழ்வாதார போராட்டங்களை கொச்சைப்படுத்தி பேசும் பேச்சுகளை உடனடியாக அவர் திரும்பபெற்றாக வேண்டும் என்று வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறோம்.

 

 

 

ஆன்மீக அரசியல் பேசும் நடிகர் ரஜினிகாந்த் அவர்கள்  சாதரணமாக ஊடகவியலாளர்கள் கேட்ட கேள்விக்கே அவர் கோபித்துக் கொள்கிறாரே. அங்கே தன்னுடைய குழந்தைகள், மனைவி, உறுவினர்கள் என பலர் ஸ்டெர்லைட் ஆலையால் புற்றுநோய் வந்து பாதிக்கப்பட்டு விழித்துகொண்டு பொறுமையுடன் போராடினார்களே பாதிக்கப்பட்டவர்களுக்கு எவ்வளவு கோபம் வந்திருக்க வேண்டும். அழிவுத்திட்டங்களால் நாசமாகும் தமிழகத்தை பார்த்து சுற்றுச்சூழல் ஆர்வலர்களுக்கு எவ்வளவு கோபம் வந்திருக்க வேண்டும். ஒரு கேள்விக்கே இவ்வளவு கோபப்படுவதுதான் ஆன்மீக அரசியலா?

ரஜினிகாந்த் கூறுவது போன்று காவல்துறையை தாக்கியதால் அங்கே கலவரம் உருவாகவில்லை, காவல்துறை தாக்கியதால்தான் அங்கே கலவரம் உருகாகியுள்ளது. ஜல்லிக்கட்டு போராட்டத்தின் இறுதியில் காவலர்கள் தீ வைத்ததை ஊடகங்கள் மூலம் ரஜினிகாந்த் பார்த்தாரா என்று தெரியவில்லை. ஒவ்வொரு முறையும் காவலர்களை தாக்கினார்கள், அடித்தார்கள் என்று வக்காலத்து வாங்கும் ரஜினிகாந்த் அவர்கள் 14 நபர்கள் சுட்டுக்கொல்லப்பட்டார்களே அவர்களுக்காக பேசி இருக்கிறாரா? காவலர்களின் துப்பாக்கிச்சூட்டை நியாயப்படுதுகிறாரார் என்று தெரியவில்லை. ஆக நடிகர் ரஜினிகாந்த் அவர்களின் பேச்சு வன்மையாக கண்டிக்கத்தக்கது. இனியாவது, காவலர்களின் துப்பாக்கிசூட்டை நியாயப்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபடாமலும், பாரதிய ஜனதாவிற்கு ஊதுகுழலாக செயல்பட்டு அவமானங்களை தேடிக்கொள்ளாமல் பொறுமையாக செயல்பட வேண்டும் என்று இதன் மூலம் நாங்கள் ரஜினிகாந்துக்கு அறிவுறுத்துகிறோம்.

தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் தி.வேல்முருகனை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்:-

தூத்துக்குடிக்கு மக்களை சந்தித்து ஆறுதல் கூறுவதற்காக சென்ற தமிழக வாழ்வுரிமை கூட்டமைப்பின் தலைவர் வேல்முருகன் அவர்கள் மீது காவல்துறை வழக்கு பதிவு செய்து கைது செய்து முன் கூட்டியே பதிவு செய்யப்பட்ட பல வழக்குகளிலும் தற்போதும் பல வழக்குகளை காவல்துறை தேடிக்கொண்டிருப்பதாக தகவல்கள் வந்துள்ளது. குறிப்பாக நெய்வேலியில் கடந்த மாதம் காவிரி நதிநீர் உரிமைக்காக நடைபெற்ற என்.எல்.சி. முற்றுகைப் போராட்டத்தில் அவர் பேசிய பேச்சை காரணமாக வைத்து அவர் மீது தேச துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார். தொடர்ந்து வேல்முருகனை முடக்க வேண்டும் அல்லது சிறையில் வைக்க வேண்டும் என்ற திட்டங்களோடு காவல்துறை செயல்படுவது அப்பட்டமாகவே இதன் மூலம் தெரியவருகிறது. தமிழகத்தில் தொடர்ந்து மக்கள் விரும்பாத அழிவுத்திட்டங்கள் திணிக்கப்படுவதை எதிர்த்து காவிரி நதிநீர் உரிமை, தமிழ்நாட்டினுடைய உரிமை நிலை நாட்டப்பட வேண்டும் என்பதற்காக தொடர்ந்து போராட்டங்களை வாழ்வுரிமை கூட்டமைப்பு முன்னெடுத்தது. இந்த போராட்டங்களை ஒடுக்க வேண்டும் என்பதற்காகத்தான் தற்போது மத்திய அரசு மற்றும் உளவுத்துறையின் தூண்டுதலோடு தமிழக காவல்துறை வேல்முருகன் அவர்கள் மீது தொடர்ந்து பல வழக்குகளை பதிவு செய்து கொண்டிருக்கிறது. அவரை சிறையிலேயே முடக்குவதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது என்று நாங்கள் குற்றம் சாட்டுகிறோம்.

 

 

தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன் அவர்கள் மீதான வழக்குகளை உடனே திரும்பப்பெற வேண்டும். தொடர்ந்து அவர் மீது பதியப்படும் வழக்குகளையும், முயற்சிகளையும் கைவிட வேண்டும் என்று தமிழக காவல்துறையை நாங்கள் வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறோம். தமிழக வாழ்வுரிமை கூட்டமைப்பின் கூட்டம் விரைவாக நடைபெறும் அதில் நாங்கள் கலந்து ஆலோசித்து அடுத்தக்கட்ட போராட்டங்களை முன்னெடுக்க இருக்கிறோம். வேல்முருகன் அல்லது மற்ற தலைவர்களை கைது செய்வது போன்ற செயல்பாடுகளால் தமிழகத்தின் உரிமைக்கான போராட்டங்களை ஒடுக்கிவிட முடியும் என்று தமிழக அரசோ காவல்துறையோ நினைக்க வேண்டாம் என்று நாங்கள் சொல்லிக்கொள்கிறோம். இன்னும் வீரியத்தோடு நாங்கள் முன்னெடுப்போம் என்று தெரிவித்துக் கொள்கிறோம்.

இச்சந்திப்பின்போது கட்சியின் மாநில செயலாளர்கள் அமீர் ஹம்ஸா, அச.உமர் பாரூக், மாநில செயற்குழு உறுப்பினர்கள் ஏ.கே.கரீம், முஹம்மது பாரூக் ஆகியோர் உடனிருந்தனர்.

 


 

சார்ந்த செய்திகள்