Skip to main content

புழல், செம்பரம்பாக்கம் ஏரிகளில் இருந்து உபரிநீர் திறப்பு எப்போது?- வெளியானது அறிவிப்பு!

Published on 07/11/2021 | Edited on 07/11/2021

 

 

When will the floodwaters from Puzhal and Sembarambakkam lakes open? - Announcement!



வடகிழக்கு பருவமழை தொடங்கியதையடுத்து, தமிழ்நாட்டில் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருச்சி, சிவகங்கை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் நீர்நிலைகள் நிரம்பி வருகின்றன. 

 

குறிப்பாக, சென்னையில் நேற்று இரவு பெய்த கனமழையால், சாலைகளில் மழைநீர் தேங்கியுள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் அவதியடைந்துள்ளனர். அதேபோல், சென்னைக்கு குடிநீர் ஆதாரமாக விளங்கும் புழல் ஏரி மற்றும் செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர் வரத்து தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், உபரி நீர் திறப்பது குறித்து, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர்கள் பொதுப்பணித்துறை அதிகாரிகளுடன் இன்று (07/11/2021) காலை ஆலோசனை நடத்தினர்.

 

இந்த நிலையில் ஏரிகளில் இருந்து உபரிநீர் திறப்பு குறித்து மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்துள்ளனர். அந்த வகையில், திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "திருவள்ளூர் மாவட்டம், புழல் ஏரியில் இருந்து இன்று (07/11/2021) காலை 11.00 மணிக்கு 500 கனஅடி உபரிநீர் திறக்கப்படும். புழல் ஏரிக்கு வரும் மழைநீர் தொடர்ந்து அதிகரித்து வருவதால், உபரிநீர் திறப்பு படிப்படியாக அதிகரிக்கப்படும். கூடுதல் உபரிநீர் படிப்படியாகத் திறக்கப்படும் என்பதால் முதற்கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்களை உடனடியாக வெளியேற்றுமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. நாரவாரிக்குப்பம், தண்டல்கழனி, வடகரை, கிராண்ட்லைன், புழல், வடபெரும்பாக்கம், மஞ்சம்பாக்கம் கிராம மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. புழல் ஏரியின் முழு கொள்ளளவான 21.20 அடியில் தற்போது 19.30 அடியாக உள்ளது" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "காஞ்சிபுரம் மாவட்டம், செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து இன்று (07/11/2021) பிற்பகல் 01.30 மணிக்கு 500 கனஅடி நீர் திறக்கப்படவுள்ளது. செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து உபரிநீர் திறக்கப்படவுள்ளதால், நத்தம், குன்றத்தூர், வழுதலம்பேடு, நந்தம்பாக்கம், பூந்தண்டலம், பழந்தண்டலம், எழுமையூர், திருமுடிவாக்கம், சிருகளத்தூர் கிராம மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

சார்ந்த செய்திகள்