Skip to main content

“நீட் விலக்கு சட்டத்திற்கு மத்திய அரசின் பதில் என்ன? மக்களிடம் விளக்க வேண்டும்!” - அன்புமணி 

Published on 20/07/2022 | Edited on 20/07/2022

 

“What is the central government's response to the NEET Exemption Act? People need to be explained!” - Anbumani

 

“நீட் விலக்கு சட்டத்திற்கு ஒப்புதல் கிடைக்குமா, கிடைக்காதா? என்பது தான். அத்தகைய சூழலில் அது தொடர்பான அனைத்து விவரங்களையும் மக்களிடம் பகிர்ந்து கொள்ள வேண்டியது மாநில அரசின் கடமையாகும். ஒருவேளை மத்திய அரசின் கருத்துகள் சாதகமானவையாக இருந்தால், அது மாணவர்கள் மத்தியில் அச்சத்தைப் போக்கியிருக்கும்; 3 மாணவர்களின் தற்கொலைகள் தடுத்து நிறுத்தப்பட்டிருக்கும்” என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார். 

 

மேலும் அவர் தனது அறிக்கையில், “தமிழ்நாடு அரசின் நீட் விலக்கு சட்டம் தொடர்பாக மத்திய சுகாதார அமைச்சகம், ஆயுஷ் அமைச்சகம் ஆகியவை சில கருத்துகளை கூறியிருப்பதாகவும், அவை குறித்த விளக்கங்களைக் கோரி தமிழ்நாடு அரசுக்கு அவற்றை அனுப்பி வைத்திருப்பதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது. மத்திய அரசு விளக்கம் கோரி இன்றுடன் ஒரு மாதம் நிறைவடைந்துவிட்ட நிலையில், அது குறித்த விவரங்களை தமிழ்நாட்டு மக்களிடமும், மாணவர்களிடமும் பகிர்ந்து கொள்ள வேண்டியது தமிழக அரசின் தலையாய கடமையாகும்.


நாடாளுமன்ற மக்களவையில் உறுப்பினர்களின் வினாக்களுக்கு விடையளித்த மத்திய உள்துறையின் இணை அமைச்சர் அஜய்குமார் மிஸ்ரா, “குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக மாநில ஆளுநர்களால் அனுப்பிவைக்கப்படும் சட்டங்கள் சம்பந்தப்பட்ட துறைகள் மற்றும் அமைச்சகங்களின் ஒப்புதலுடன் மத்திய உள்துறை அமைச்சகத்தால் பரிசீலிக்கப்படும். நீட் விலக்கு சட்டம் தொடர்பாக மத்திய சுகாதார அமைச்சகம், ஆயுஷ் அமைச்சகம் ஆகியவற்றிடமிருந்து சில கருத்துகள் பெறப்பட்டுள்ளன; அவற்றிற்கான தமிழக அரசின் விளக்கங்களை பெறுவதற்காக முறையே ஜூன் 21, 27 தேதிகளில் தமிழக அரசுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளன. இது போன்ற விஷயங்களில் கலந்தாய்வு நடைமுறை அதிக காலம் நீடிக்கும். எனவே, நீட் விலக்கு சட்டத்திற்கு ஒப்புதல் அளிக்க காலவரை கிடையாது’’ என்று தெரிவித்திருக்கிறார்.

 

மத்திய அமைச்சரின் பதில் இரு வழிகளில் ஏமாற்றம் அளிக்கிறது. முதலாவதாக நீட் விலக்கு சட்டத்திற்கு ஒப்புதல் அளிக்க காலவரையறை நிர்ணயிக்கப்படவில்லை என மத்திய உள்துறை இணையமைச்சர் கூறியிருப்பதை ஏற்க முடியாது. மத்திய அரசு நினைத்தால் நீட் விலக்கு சட்டத்திற்கு இந்நேரம் ஒப்புதல் அளித்திருக்க முடியும். நீட் விலக்கு சட்டத்திற்கு சுகாதாரம், ஆயுஷ் ஆகிய இரு அமைச்சகங்களின் கருத்துகளைக் கேட்டறிந்து, அவற்றின் அடிப்படையில் மத்திய உள்துறை அமைச்சகம் ஒப்புதல் அளிக்க வேண்டும்.


2006ஆம் ஆண்டில் தமிழகத்தில் மருத்துவம், பொறியியல் உள்ளிட்ட அனைத்து தொழில் படிப்புகளுக்குமான நுழைவுத் தேர்வுகளை ரத்து செய்வதற்கான சட்டம் நிறைவேற்றி அனுப்பப்பட்ட போது சுகாதாரத்துறை அமைச்சராக நான் பதவி வகித்தேன். அப்போது சுகாதாரம், மனிதவள மேம்பாடு உள்ளிட்ட துறைகளின் கருத்துகள் கேட்கப்பட்டு தமிழக சட்டப்பேரவையில் சட்டம் இயற்றப்பட்ட நாளில் இருந்து 83 நாட்களில் குடியரசுத் தலைவரின் ஒப்புதல் பெறப்பட்டது என்பதை நினைவுகூற விரும்புகிறேன்.


ஆனால், தமிழக சட்டப்பேரவையில் நீட் விலக்கு சட்டம் கடந்த ஆண்டு செப்டம்பர் 13ஆம் தேதி முதன்முறையாக நிறைவேற்றப்பட்டு இன்றுடன் 313 நாட்களாகிவிட்டன. நீட் விலக்கு சட்டம் கடந்த மே 2ஆம் தேதி மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டு இன்றுடன் 80 நாட்களாகிவிட்டன. மருத்துவக் கல்லூரி மாணவர் சேர்க்கை செப்டம்பர் மாதத்தில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் இந்த விஷயத்தில் மத்திய அரசு இன்னும் விரைவாக செயல்பட்டு நீட் விலக்கு சட்டத்திற்கு ஒப்புதல் தர வேண்டும்.


மற்றொருபுறம் நீட் விலக்கு சட்டம் தொடர்பாக மத்திய சுகாதாரத்துறையின் கருத்துகள் அனுப்பப்பட்டு  இன்றுடன் ஒரு மாதமும், ஆயுஷ் அமைச்சகத்தின் கருத்துகள் அனுப்பப்பட்டு 24 நாட்களும் ஆகும் நிலையில் அது குறித்த விவரங்களை தமிழ்நாட்டு மக்களிடம் தமிழக அரசு பகிர்ந்து கொள்ளாதது மிகுந்த ஏமாற்றம் அளிக்கிறது. தமிழ்நாட்டு மக்களின் மனங்களை குடைந்து கொண்டிருக்கும் ஒற்றை வினா, நீட் விலக்கு சட்டத்திற்கு ஒப்புதல் கிடைக்குமா, கிடைக்காதா? என்பது தான். அத்தகைய சூழலில் அது தொடர்பான அனைத்து விவரங்களையும் மக்களிடம் பகிர்ந்து கொள்ள வேண்டிய மாநில அரசின் கடமையாகும். ஒருவேளை மத்திய அரசின் கருத்துகள் சாதகமானவையாக இருந்தால், அது மாணவர்கள் மத்தியில் அச்சத்தைப் போக்கியிருக்கும்; 3 மாணவர்களின் தற்கொலைகள் தடுத்து நிறுத்தப்பட்டிருக்கும். இவையெல்லாம் தெரிந்தும் அந்த விவரங்களை தமிழக அரசு வெளியிடாததன் காரணம் தெரியவில்லை.


நீட் விலக்கு சட்டத்திற்கு ஒப்புதல் பெறுவதன் மூலமாக மட்டும் தான் மாணவர்கள் தற்கொலைகளையும், கிராமப்புற, ஏழை மாணவர்களுக்கு இழைக்கப்படும் சமூக அநீதியையும் தடுத்து நிறுத்த முடியும். எனவே, நீட் விலக்கு சட்டம் தொடர்பாக மத்திய அரசு தெரிவித்த கருத்துகளின் விவரங்களை தமிழக அரசு வெளியிட வேண்டும். அத்துடன் மத்திய அரசின் கருத்துகள் குறித்த விளக்கங்களை உடனடியாக அனுப்பி வைத்து நீட் விலக்கு சட்டத்திற்கு விரைவாக ஒப்புதல் பெற நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்