நெய்வேலி என்எல்சி நிறுவனம் மூன்றாவது சுரங்கம் அமைப்பதற்காக விருத்தாசலம், புவனகிரி வட்டாரங்களில் உள்ள 40 கிராமங்களில் இருந்து 12,125 ஏக்கர் பரப்பளவில் விளைநிலங்களை கையகப்படுத்துவதற்கு மாவட்ட நிர்வாகம் மூலம் முயற்சித்து வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் பல கட்ட போராட்டங்கள் நடந்தி வருகின்றனர்.
இந்நிலையில் விருத்தாசலம் அடுத்த தர்மநல்லூர் கிராமத்தில் திரைப்பட இயக்குனர் கவுதமன் தலைமையில் 40 கிராம மக்கள் கலந்து கொண்ட ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் மக்களின் வாழ்வாதரத்தை அழிக்க நினைக்கும் என்.எல்.சி நிறுவனத்தை கண்டித்தும், அதற்கு துணை நிற்கும் மத்திய, மாநில அரசுகளை கண்டித்தும் கண்டன முழக்கங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய இயக்குனர் கவுதமன்,
" மக்களின் வாழ்வாதரத்தை அழித்து, விளை நிலங்களை கையகப்படுத்த துடிக்கும், என்.எல்.சி நிறுவனத்தின் மூன்றாவது சுரங்கம் அமைக்க விடமாட்டோம். மேலும் விளைநிலங்களை கையகப்படுத்தும் முயற்சியில் ஈடுப்பட்டால் ஜல்லிக்கட்டு போராட்டத்தை போல் மிகப் பெரிய அளவில் கிராம மக்களை ஒன்று திரட்டி போராட தயாராக உள்ளேன்" என்று எச்சரிக்கை விடுத்தார்.
பின்னர் ஓட்டிமேடு, பெருந்துறை, கோட்டிமுளை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு சென்று பொதுமக்களிடம் உரையாற்றினார்.