Skip to main content

"புற்றுநோய் விழிப்புணர்வு பிரச்சாரத்தை முன்னெடுக்க வேண்டும்"- அமைச்சரை நேரில் சந்தித்த ஜோதிமணி எம்.பி.!

Published on 22/08/2021 | Edited on 22/08/2021

 

"We need to launch this awareness campaign" - Jyoti Mani MP!

காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த கரூர் மக்களவை உறுப்பினர் ஜோதிமணி இன்று (22/08/2021) தமிழ்நாடு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியனை நேரில் சந்தித்து மனு அளித்தார். 

 

இது குறித்து ஜோதிமணி எம்.பி. தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், "கரூர், திருச்சி, கோவையில் புற்றுநோய் சிகிச்சை மையம் மற்றும் விழிப்புணர்வு பிரச்சாரம் தொடர்பாக மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்பிரமணியனைச் சந்தித்தேன்.புற்றுநோய் பாதிப்பு கவலையளிக்கும் வகையில் அதிகரித்து வருகிறது. குறிப்பாக பெண்களிடம். 

 

புற்றுநோய் குறித்த பயம், குடும்ப சூழல், போதுமான விழிப்புணர்வு இன்மையால் ஆரம்பத்தில் கண்டறிய முடிவதில்லை. புற்றுநோய் முற்றிய நிலையில் பெரும்பாலும் குணமாக்க இயலாமல் தொடர்ந்து உயிரிழப்புகள் ஏற்பட்டு வருகின்றன.

 

ஒருவேளை ஆரம்ப நிலையிலேயே கண்டறியப்பட்டாலும் ஏழை, எளிய, கிராமப் புற மக்களுக்கு தரமான சிகிச்சைக் கிடைப்பது மிகுந்த சவாலாக உள்ளது. மக்கள் தரமான சிகிச்சைக்காக வெகு தொலைவில் இருக்கும் சென்னை அடையாறு புற்றுநோய் மையத்திற்கோ, புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கோ செல்ல வேண்டியுள்ளது.

"We need to launch this awareness campaign" - Jyoti Mani MP!

தமிழ்நாட்டில் புற்றுநோயை தடுப்பதை ஒரு இயக்கமாக முன்னெடுக்க வேண்டும். புற்றுநோய் உயர் சிகிச்சைக்காக மண்டல புற்றுநோய் சிகிச்சை மையங்களை கரூர்,  கோவை, திருச்சி, ஆகிய இடங்களில் அமைப்பது. மாவட்ட மருத்துவமனைகளில் புற்றுநோய் பரிசோதனை மற்றும் முதல்நிலை சிகிச்சை மையம் அமைப்பது. 

 

மக்களைத் தேடி மருத்துவம் திட்ட பணியாளர்கள், செவிலியர்கள் தன்னார்வலர்கள் மூலம் புற்றுநோய் குறித்து, சுயபரிசோதனை உள்ளிட்ட நோய் கண்டறியும் முறை மற்றும் சிகிச்சைகள் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்துவது. நோய் பாதிப்பு ஏற்பட அதிக வாய்ப்புள்ளவர்களுக்கு விரைவாக பரிசோதனை (எ.கா. கருப்பைவாய் புற்றுநோய்க்கு VILI, VIA பரிசோதனைகள்) செய்தல் உள்ளிட்ட முயற்சிகளை முன்னெடுப்பது. காங்கிரஸ் ஆட்சியில் புற்றுநோயை ஆரம்ப நிலையிலோ, வருவதற்கு வாய்ப்புள்ள நிலையிலோ கண்டறிய VILI, VIA எனும் முக்கிய பரிசோதனை அனைத்து அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் செயல்படுத்தப்பட்டது.

 

இது குறித்த விளம்பரங்கள் தொடர்ச்சியாக வானொலியில் ஒலிபரப்பப்பட்டது. மோடி ஆட்சியில் நிறுத்தப்பட்டு விட்ட இந்த விழிப்புணர்வு பிரச்சாரத்தை முன்னெடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டேன். இதன் தீவிரத்தை புரிந்து கொண்டு உடனடியாக கரூர், திருச்சி, கோவையில் புற்றுநோய் பரிசோதனை மையங்களை அமைப்பதாக உறுதியளித்த அமைச்சர் மா.சுப்பிரமணியனுக்கு மனமார்ந்த நன்றிகள்" என்று குறிப்பிட்டுள்ளார். 

 

சார்ந்த செய்திகள்