நாகூர் கந்தூரி விழாவிற்கு கவர்னர் வந்தால், வர்த்தகம் பாதிக்கப்படும், சிறப்பு விருந்தினரின் வருகையை வேறு தேதிக்கு மாற்ற வேண்டும் என வணிகர் சங்கத்தினர் ஆட்சியர் மற்றும் மாவட்ட காவல் கண்கானிப்பாளருக்கு மனு அளித்துள்ளனர்.
நாகை மாவட்டம், நாகூரில் அமைந்துள்ள புகழ்பெற்ற ஆண்டவர் தர்காவின் 467ம் ஆண்டு கந்தூரி விழா கடந்த 14ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. ஆண்டவர் தர்காவின் முக்கிய நிகழ்ச்சியான சந்தனம் பூசும் வைபவம் வரும் 24ம் தேதி நடைபெறுகிறது. இவ்விழாவிற்கு உலகம் முழுவதிலிருந்தும் அன்பர்கள் வந்து கலந்துகொண்டு சிறப்பிப்பது வழக்கம். இந்த ஆண்டு நடக்கவிருக்கும் சந்தனம்பூசும் விழாவில் பங்கேற்பதற்காக வரும் 23ம் தேதி தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி நாகூருக்கு வருகை தர உள்ளார்.
இதனிடையே கந்தூரி விழாவிற்கு கவர்னர் வந்தால், பாதுகாப்பு என்கிற பெயரில் பொதுமக்களுக்கு கெடுபிடி ஏற்படுவதுடன், பதட்டமான சூழலை உண்டாக்கி அதனால் வர்த்தகம் பாதிக்கப்படும் எனக் கூறி நாகூரைச் சேர்ந்த வணிகர் சங்கத்தினர் இன்று நாகை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஹர்ஷ் சிங்கிடம் கோரிக்கை மனு அளித்தனர்.
அதில் சிறப்பு விருந்தினரின் வருகையை வேறு தேதிக்கு மாற்ற வேண்டும் என்றும் அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். இதே கோரிக்கைகளை முன்வைத்து நாகூர் தர்கா சாகிபுமார்கள் முன்னேற்ற சங்கம் சார்பிலும் எஸ்.பி.யிடம் கோரிக்கை மனு அளித்துள்ளனர்.
இதற்கிடையே ஆண்டவர் கந்தூரி விழாவிற்கு வருகை தருமாறு நாகூர் தர்ஹா பரம்பரை ஆதீனஸ்தர்கள் சார்பில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி மற்றும் தமிழக அமைச்சர்களான செஞ்சி மஸ்தான், ரகுபதி உள்ளிட்ட முக்கிய பிரமுகர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.