Skip to main content

நக்கீரன் இணையச் செய்தி எதிரொலி! ‘பாலியல் தொல்லை’ இன்ஸ்பெக்டர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்!

Published on 23/04/2022 | Edited on 23/04/2022

 

virudhunagar district police inspector transfer

 

’பெண் ஏட்டுக்கு டார்ச்சர்! இன்ஸ்பெக்டர் மீது பாலியல் புகார்!’ என்னும் தலைப்பில் ஏப்ரல் 22- ஆம் தேதி நக்கீரன் இணையத்தில் செய்தி வெளியிட்டிருந்தோம். அதன் எதிரொலியாக மறுநாளே (23-ஆம் தேதி) விருதுநகர் மாவட்டம், சிவகாசி உட்கோட்டத்திலுள்ள திருத்தங்கல் காவல்நிலையத்தில் பணிபுரியும் காவல் ஆய்வாளர் முத்துப்பாண்டியன் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளார். 

 

திருத்தங்கல் காவல் நிலையத்தில் ஏட்டாகப் பணிபுரியும் பெண்ணிடம் இன்ஸ்பெக்டர் முத்துப்பாண்டியன் தவறான நோக்கத்தில் பேசி ‘டார்ச்சர்’ செய்திருக்கிறார்.  தான் சொன்னபடி நடக்காவிட்டால், பணியில் கடுமை காட்ட வேண்டியதிருக்கும் என்று மிரட்டவும் செய்திருக்கிறார். ஆனாலும், நெஞ்சுரத்துடன் பெண் தலைமைக் காவலர் சம்மதிக்காத நிலையில்,  ‘வேலை சரியாகப் பார்ப்பதில்லை..’ எனக் குற்றம் சுமத்தி, அவரை ‘டிரான்ஸ்பர்’ செய்வதற்கான நடவடிக்கையில் இன்ஸ்பெக்டர் முத்துப்பாண்டியன் இறங்கியிருக்கிறார். ஒருகட்டத்தில் பொறுமையிழந்த அந்த பெண் தலைமைக் காவலர், சிவகாசி டி.எஸ்.பி. பாபு பிரசாந்திடம் புகாரளித்துள்ளார்.

 

காவல்துறை அதிகாரி சம்பந்தப்பட்ட பாலியல் விவகாரம் என்பதால்,  விசாரணை என்ற பெயரில் போக்கு காட்டிவிட்டு, பெரிதாக நடவடிக்கை எதுவும் எடுக்கமாட்டார்கள் எனக் காவலர்கள் வட்டாரம்  கருதிய நிலையில், சம்பந்தப்பட்ட பெண் தலைமைக் காவலர் மற்றும் இன்ஸ்பெக்டர் முத்துப்பாண்டியனிடம் விளக்கம் பெற்று, நக்கீரன் இணையத்தில் செய்தி வெளியிட்டோம். 

 

அச்செய்தியின் எதிரொலியாக, திருத்தங்கல் காவல்நிலைய தலைமைக் காவலர் அளித்த புகாரை, விருதுநகர் மாவட்ட எஸ்.பி. மனோகர் விசாரிக்க, அதனடிப்படையில் மதுரை டி.ஐ.ஜி. பொன்னியின் ஆலோசனையின்படி, இன்ஸ்பெக்டர் முத்துப்பாண்டியனை காத்திருப்போர் பட்டியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. 

 

காவல்துறை அதிகாரிகள் மீதான பாலியல் புகார்களிலும்கூட,  தமிழக காவல்துறை விரைவாக விசாரணை மேற்கொண்டு, வேகமாக நடவடிக்கை எடுத்துவருவது பாராட்டுக்குரியது. 

 

சார்ந்த செய்திகள்