Skip to main content

 7 திரைகளை நீக்கி வடலூர் வள்ளலார் சத்திய ஞான சபையில் ஜோதி தரிசனம்!

Published on 21/01/2019 | Edited on 21/01/2019
j


கடலூர் மாவட்டம்  வடலூர் அருகே உள்ள மருதூரில் பிறந்தவர் வள்ளற்பெருமான் என்கின்ற இராமலிங்க வள்ளலார். இவர் சென்னை, கருங்குழி, வடலூர், ஆகிய பகுதிகளில் வசித்து வந்தார். 14 ஆண்டுகள் கருங்குழியில் தங்கிய வள்ளலார் திருவருட்பா எழுதினார். இறைவன் ஒளி வடிவானவர் என்பதை உலகிற்கு எடுத்துரைக்கும் வகையில் வடலூரில் சத்தியஞான சபையை வள்ளலார் நிறுவினார்.

மேலும் ஏழை, எளிய மக்களின் பசியை போக்க சத்தியஞான சபையை அருகிலேயே தருமச்சாலையை நிறுவினார். அன்று முதல் இன்று வரை அந்த தருமச்சாலையில் அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது. பின்னர் வள்ளலார் வடலூர் அருகே உள்ள மேட்டுக்குப்பத்தில் சித்தி பெற்றார்.

 

jo


இதை தொடர்ந்து மாதந்தோறும் தைப்பூச நட்சத்திரத்தன்று சத்தியஞான சபையில் 6 திரைகளை நீக்கி ஜோதி தரிசனம் நடைபெற்று வருகிறது. தை மாதத்தில் வரும் பூச நட்சத்திரத்தன்று தைப்பூச திருவிழா  சிறப்பாக நடைபெற்று வருகிறது. அதன்படி இந்த ஆண்டு 148 வது தைப்பூச திருவிழா கொடியேற்றத்துடன் நேற்று  தொடங்கியது.

 

விழாவையொட்டி நேற்று காலை 5 மணிக்கு அகவல் பாராயணமும், 7-30 மணிக்கு தருமச்சாலை, மருதூர் இல்லம், கருங்குழி இல்லம், மேட்டுகுப்பம் ஆகிய இடங்களிலும் காலை 10 மணிக்கு சத்தியஞான சபையிலும் சன்மார்க்க கொடி ஏற்றபட்டது. தொடர்ந்து சன்மார்க்க சொற்பொழிவுகள், இசை நிகழ்ச்சிகளும்  நடைபெற்றது.

 

j


இன்று  காலை 06.00 மணிக்கும், 10.00 மணிக்கும் 7  திரைகளை நீக்கி ஜோதி தரிசனம் காண்பிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து பகல் 1.00 மணி, இரவு 7 மணி, 10 மணிக்கும்  22-ஆம் தேதி செவ்வாய்க்கிழமை நாளை  காலை 5.30 மணிக்குமாக  6 காலங்களில் 7 திரைகளை நீக்கி தைப்பூச ஜோதி தரிசனம் காண்பிக்கப்படுகிறது.  பின்னர் 23-ந்தேதி புதன்கிழமை வள்ளலார் சித்தி பெற்ற மேட்டுக்குப்பத்தில் மதியம் 12 மணி முதல் மாலை 6 மணி வரை வள்ளலார் சித்தி பெற்ற திருஅறை தரிசனம் நடைபெறுகிறது. 

 

தைப்பூச ஜோதி தரிசனத்தை முன்னிட்டு  வடலூரில் மது, மாமிச கடைகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. கடலூர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.  ஜோதி தரிசனத்தை காண நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து வள்ளலார் பக்தர்கள் வந்த வண்ணம் உள்ளனர்.

 

சார்ந்த செய்திகள்