Skip to main content

போக்குவரத்து தொழிலாளர்களின்  ஊதிய ஒப்பந்தம் - சிஐடியூவின் வழக்கு ஒத்திவைப்பு

Published on 14/02/2018 | Edited on 14/02/2018

 

bus

 

போக்குவரத்து தொழிலாளர்களின்  ஊதிய ஒப்பந்தம்  தொடர்பாக உயர் நீதிமன்றம் நியமித்த ஓய்வுபெற்ற நீதிபதி அனைத்து விதமான கோரிக்கை குறித்து பேச்சுவார்தை நடத்த உத்தரவிடக்கோரி திமுக-வின் தொழிற்சங்கமான தொமுச சென்னை உயர் நீதிமன்றத்தை நாடியுள்ளது.

 

பொங்கல் பண்டிகைக்கு முன்பாக 8 நாட்களாக வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்ட போக்குவரத்து தொழிலாளர்களின் போராட்டம் தொடர்பான வழக்குகளை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் ,  ஊதிய ஒப்பந்தம் தொடர்பாக ஆய்வு செய்ய ஓய்வு பெற்ற நீதிபதி பத்மநாபனை  நியமித்து  உத்தரவிட்டது. இந்த உத்தரவை அடுத்து போராட்டம் தற்காலிகமாக வாபஸ் பெறப்பட்டது.

 


இதனைத் தொடர்ந்து நீதிபதி  தலைமையில் பேச்சுவார்தை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தொமுச சார்பில் உயர்நீதிமன்றத்தில் கூடுதல் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. 

 

அந்த மனுவில் ஊதிய ஒப்பந்தம் தொடர்பாக மட்டும் மத்தியஸ்தர் பேச்சுவார்த்தை நடத்துவார் என்ற உத்தரவை மாற்றி அனைத்து கோரிக்கைகள் தொடர்பாகவும் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. 

 

இந்த வழக்கு இன்று நீதிபதிகள் மணிக்குமார், கோவிந்தராஜ் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தபோது  தொமுக சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பிரகாஷ், நீதிமன்ற உத்தரவினை ஏற்று போக்குவரத்து தொழிலாளர்கள் அனைவரும் பணிக்கு திரும்பினார்கள்; இதனைத் தொடர்ந்து ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது என தெரிவித்தார். ஆனால் மத்தியஸ்தர் ஊதிய உயர்வு தொடர்பாக மட்டும் பேச்சுவார்தை நடத்துகிறார். எனவே உங்களின் உத்தரவை மாற்ற தொழில் தகராறு சட்டம் பிரிவு 10 (ஏ) ன் படி அனைத்து பிரச்சனைகள் தொடர்பாகவும் மத்தியஸ்தர் பேச்சுவார்தை நடத்த உத்தரவிட வேண்டும் என்று கோரிக்கை வைத்தார். 

 


இதற்கிடையில் சிஐடியு தரப்பில் ஆஜரான  வழக்கறிஞர் என்.ஜி.ஆர் பிரசாத், தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஊழியர் சங்கத்தையும் இந்த வழக்கில் சேர்க்க வேண்டும் என்றும், தொழில் தகராறு சட்டம் பிரிவு 10 இன் படி அனைத்து கோரிக்கைகளையும் மத்தியஸ்தர் பரிசீலனை செய்ய வேண்டும் என்று மனு தாக்கல் செய்திருப்பதாகவும் அதையும் சேர்த்து விசாரிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார். 

 

இதனை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள்  சிஐடியூவின் மனுக்களை நாளை  பட்டியலிட உத்தரவிட்டு  வழக்கை  ஒத்திவைத்தனர்.

- சி.ஜீவா பாரதி

சார்ந்த செய்திகள்