குரூப்-2 புதிய பாடத்திட்டம் தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்து விளக்கம் அளித்துள்ள டிஎன்பிஎஸ்சி செயலர் நந்தகுமார், புதிய பாட திட்டத்தினால், தமிழில் படிக்காதவர்கள், எழுத தெரியாதவர்கள் தேர்ச்சி பெற முடியாது. முன்னர், பொது அறிவு மற்றும் பொது ஆங்கிலம் தேர்வுகள் இருந்தன. தமிழ் தெரியாத ஒருவர் பொது அறிவு மற்றும் பொது ஆங்கிலத்தை தேர்வு செய்து, தேர்வின் கடைசி கட்டம் வரை வர முடியும். தற்போது கட்டாயம் தமிழ் படிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
குரூப்-2 முதன்மைத் தேர்வில் தமிழ் இருப்பதால், முதல்நிலை தேர்வில் தமிழ்மொழிப்பாடம் நீக்கப்பட்டுள்ளது. குரூப்- 2 பழைய பாடத்திட்டத்தின்படி தமிழே தெரியாத ஒருவர் தேர்வில் வெற்றி பெற்று அரசு பணிக்கு செல்ல முடியும். ஆனால் புதிய பாடத்திட்டத்தின் மூலம் தமிழ் தெரியாதவர்கள் தேர்ச்சி பெறுவது முற்றிலும் தடுக்கப்பட்டுள்ளது.
இதனால் குரூப்-2 தேர்வில் இனி கிராமப்புற மற்றும் தமிழ் வழியில் படித்த மாணவர்களும் தேர்ச்சி பெறுவார்கள். மேலும் புதிய பாடத்திட்டத்திற்கு தயாராக மாணவர்களுக்கு போதுமான கால அவகாசம் வழங்கப்படும் என்றும், 2020- ஆம் ஆண்டுக்கான டிஎன்பிஎஸ்சி தேர்வு அட்டவணை ஒரு மாதத்தில் வெளியாகும் என்றும் நந்தகுமார் கூறினார்.