இந்தியாவின் தேர்தல் வரலாற்றை டி.என்.சேஷன் அவர்களின் பங்களிப்பைக் குறிப்பிடாமல் பதிவு செய்ய முடியாது என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தியாவின் முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையரும், தலைசிறந்த குடிமைப்பணி அதிகாரியுமான டி.என். சேஷன் அவர்கள் சென்னையில் காலமான செய்தி அறிந்து பெரும் அதிர்ச்சி அடைந்தேன்.
இந்தியாவின் தேர்தல் வரலாற்றை டி.என்.சேஷன் அவர்களின் பங்களிப்பைக் குறிப்பிடாமல் பதிவு செய்ய முடியாது. இந்தியாவில் தேர்தல் ஆணையம் உருவாக்கப்பட்டு 40 ஆண்டுகளுக்கும் மேலாக அதுபற்றி மக்களுக்கு தெரியாமல் இருந்த நிலையில், தேர்தல் ஆணையத்தின் அதிகாரம் எவ்வளவு என்பதை இந்தியாவுக்கு உணர்த்தியவர் சேஷன். இந்தியத் தேர்தல் முறையில் மலிந்து கிடந்த முறைகேடுகளை களைந்து, வெளிப்படைத் தன்மையை ஏற்படுத்தி ஜனநாயகத்தை வலுப்படுத்தியவர். அதற்காக டி.என். சேஷன் அவர்களுக்கு ஒட்டுமொத்த இந்தியாவும் எப்போதும் நன்றிக்கடன்பட்டிருக்கும்.
தமிழ்நாடு தொகுதி இந்திய ஆட்சிப்பணி அதிகாரியாக பணியைத் தொடங்கி, ஒப்பீட்டளவில் குறைந்த வயதில் மத்திய அமைச்சரவைச் செயலராக உயர்ந்தவர். பணியின் போதும், பணியிலிருந்து ஓய்வு பெற்ற பிறகும் நேர்மை. துணிச்சல், வெளிப்படைத் தன்மை, திறமை என அனைத்துக்கும் எடுத்துக்காட்டாக திகழ்ந்தவர். அதன் பயனாகத் தான் பணி ஓய்வுக்குப் பிறகும் கூடபல நிர்வாகப் பொறுப்புகள் அவரைத் தேடி வந்தன. அவரது வாழ்விலிருந்து கற்றுக்கொள்ள பல விஷயங்கள் உள்ளன.
அவரை இழந்து வாடும் உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும், தேர்தல் ஆணையத்தின் முன்னாள், இந்நாள் அதிகாரிகளுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு கூறியுள்ளார்.