Skip to main content

திருவந்திபுரம் கோயில் வாசலில் திருமணங்கள்!

Published on 25/04/2021 | Edited on 25/04/2021

 

tn lockdown temples marriage couples

 

கடலூர் மாவட்டம், திருவந்திபுரத்திலுள்ள தேவநாதசுவாமி கோயில் சின்ன திருப்பதி என்று அழைக்கப்படுகிறது. இங்கு ஒவ்வொரு முகூர்த்த நாட்களிலும் 100- க்கும் மேற்பட்ட திருமணங்கள் நடைபெறும். இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயிலில் முறையாக மணமக்களின் குடும்பத்தினர் திருமணத்திற்கான அனுமதி வேண்டி விண்ணப்பித்த பிறகு தான் இங்கு திருமணம் நடத்தப்படும். அதற்காக, அவர்களுக்கு அரசின் மூலம் பதிவு சான்றிதழ் வழங்கப்படும்.

 

tn lockdown temples marriage couples

 

இந்நிலையில் கரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் ஆலயங்களில் திருமணம் உள்ளிட்ட விழாக்கள் நடத்த தமிழக அரசு கட்டுப்பாடு விதித்துள்ளது. இன்று (25/04/2021) ஞாயிற்றுக்கிழமை என்பதால் முழு ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் நேற்று (24/04/2021) இரவு முதல் அனைத்து வழிபாட்டு தலங்களையும் மூட தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் இன்று (25/04/2021) முகூர்த்த நாளில் பல்வேறு குடும்பத்தினர் தங்களுடைய வேண்டுதலை நிறைவேற்றும் வகையில் திருவந்திபுரம் தேவநாதசுவாமி கோயிலில் திருமணம் நடத்துவதாக முன்பே திட்டமிட்டு இருந்தனர். ஆனால் கோயில் மூடப்பட்டதால் தங்கள் வேண்டுதலை நிறைவேற்றும் வகையில் மூடப்பட்ட கோயிலின் எதிரே உள்ள சாலையில் தங்களது முக்கியக் உறவினர்களுடன் திருமணங்களை நடத்தினர். இன்று (25/04/2021) சுமார் 50- க்கும் மேற்பட்ட திருமணங்கள் சாலைகளிலேயே நடைபெற்றன. கோயில் அர்ச்சகர்கள் சாலைக்கு வந்து அவசர அவசரமாக மந்திரங்கள் ஓதி திருமணங்களை நடத்தி வைத்தனர்.

 

tn lockdown temples marriage couples

 

அதேபோல் விருத்தாசலம் அருகே மணவாளநல்லூரில் உள்ள கொளஞ்சியப்பர் திருக்கோயிலும் மூடப்பட்டிருந்தது. இதனால் இந்த கோயிலில் முன்கூட்டியே திருமணம் நடத்தி முடிக்க திட்டமிட்டிருந்த மணமக்களின் குடும்பத்தினர், அதன் தொடர்ச்சியாக மணமக்களை இன்று கோயிலுக்கு அழைத்து வந்தனர். பின்பு கோயில் வாசலுக்கு முன்பு மணமக்களை நிற்க வைத்து திருமணங்களை நடத்தி முடித்தனர்.

 

tn lockdown temples marriage couples

 

ஏற்கனவே, நிச்சயிக்கப்பட்ட திருமணங்கள் திடீரென அரசு அறிவித்த முழு ஊரடங்கினால் சாலையில் நடக்க வேண்டிய நிர்ப்பந்தத்துக்கு ஆளானதாகவும், தங்களது உறவினர்கள், நண்பர்களை அழைத்து விமரிசையாக நடத்த முடியவில்லை என்று மணமக்கள் வீட்டாரின் குடும்பத்தினர் ஆதங்கத்துடன் கூறினர். 

 

 

சார்ந்த செய்திகள்