Skip to main content

டிப்பர் லாரி மோதி விபத்து; முதல்வர் மு.க. ஸ்டாலின் நிவாரணம் அறிவிப்பு 

Published on 11/08/2023 | Edited on 11/08/2023

 

Tipper truck accident Chief Minister M. K. Stalin's relief announcement

 

செங்கல்பட்டு மாவட்டம் பொத்தேரியில் உள்ள சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், இன்று காலை மொத்தம் 3 இரு சக்கர வாகனங்கள் ஒரே நேரத்தில் சாலையைக் கடக்க முயன்ற போது, எதிர்பாராத விதமாக கட்டுப்பாட்டை இழந்து அதிவேகமாக வந்த டிப்பர் லாரி ஒன்று, இரு சக்கர வாகனங்கள் மீது மோதியுள்ளது. இந்த விபத்தில் 4 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த விபத்தில் படுகாயம் அடைந்த ஒருவர் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

 

விபத்து குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் மீட்புப் பணியில் ஈடுபட்டனர். இந்தச் சம்பவம் அப்பகுதியினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருந்தது. மேலும் விபத்து நடந்த இடத்தில் 50க்கும் மேற்பட்ட பெண்கள் மற்றும் பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். பொதுமக்களின் சாலை மறியல் காரணமாக, சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் மீன்டும் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

 

இந்நிலையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,“செங்கல்பட்டு மாவட்டம், மறைமலைநகர் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட காட்டுப்பாக்கம் ரயில்வே சாலை சந்திப்பு எதிரில் இன்று (11.8.2023) காலை சென்னை நோக்கி வந்த லாரி கட்டுப்பாட்டை இழந்து செங்கல்பட்டு நோக்கி சென்ற மூன்று இருசக்கர வாகனங்களின் மீது எதிர்பாராத விதமாக மோதியதால் ஏற்பட்ட விபத்தில் நான்கு பேர் உயிரிழந்தனர் என்ற துயரமான செய்தியினைக் கேட்டு மிகுந்த வேதனையடைந்தேன்.


செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியரை விபத்து நடந்த இடத்திற்குச் சென்று தேவையான மீட்பு நடவடிக்கைகளையும், மருத்துவ உதவிகளையும் விரைந்து மேற்கொள்ள கேட்டுக்கொண்டேன். மேலும், இவ்விபத்தில் காயமடைந்து செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் பார்த்தசாரதி என்பவருக்கு சிறப்பு சிகிச்சை அளிக்க அறிவுறுத்தியுள்ளேன்.

 

இவ்விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும் அவர்களது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதோடு உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா இரண்டு இலட்சம் ரூபாயும், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பார்த்தசாரதிக்கு ஐம்பதாயிரம் ரூபாயும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன்” எனத் தெரிவித்துள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்