கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ளது உலகியநல்லூர். கடந்த 14 ஆம் தேதி இரவு அந்த ஊர் வழியாகச் சென்ற விவசாய டிராக்டர் மோதிய விபத்தில் 15 வயது இந்துமணி 17 வயது பச்சையப்பன் 18 வயது மணிகண்டன் ஆகிய மூன்று மாணவர்கள் உயிரிழந்தனர். இதுகுறித்து சின்ன சேலம் போலீசார் வழக்குப் பதிவு செய்து சம்பவத்தன்று இரவே டிராக்டர் ஓட்டுநர் அம்மாசி என்பவரைக் கைது செய்துள்ளனர்.
இந்த நிலையில் டிராக்டர் உரிமையாளரைக் கைது செய்யக்கோரி இறந்து போன மாணவர்களின் உறவினர்கள், விருகாவூர் மும்முனை சந்திப்பில் கள்ளக்குறிச்சி டூ விருத்தாசலம் நெடுஞ்சாலையில் நூற்றுக்கு மேற்பட்டோர் கொட்டும் மழையில் அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டு வாகன போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது. வாகன விபத்தில் பலியான மூன்று மாணவர்களின் உறவினர்களிடம் கள்ளக்குறிச்சி தெற்கு மாவட்ட திமுக செயலாளரும் ரிஷிவந்தியம் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான வசந்தம் கார்த்திகேயன் அவர்கள் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது மறியலில் ஈடுபட்டவர்கள், பெயரளவிற்கு ஒருவரைக் கைது செய்துள்ளனர் என்று கூறினர். எனவே அதில் சம்பந்தப்பட்ட அனைவரையும் கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினர்.
இது குறித்து காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்கும் என்று அவர் உறுதியளித்ததின் பேரில் மறியலில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர். சம்பவ இடத்தில் கள்ளக்குறிச்சி டிஎஸ்பி ரமேஷ், கள்ளக்குறிச்சி உதவி ஆய்வாளர் ரவிச்சந்திரன் மற்றும் போலீஸார் உடன் இருந்தனர். சுமார் 40 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.