Skip to main content

கரோனா பரவல் தடுப்பு காரணமாக திருவண்ணாமலையில் 3 நாட்களுக்கு வெளி நபர்கள் வரத் தடை...!

Published on 24/11/2020 | Edited on 24/11/2020

 

thiruvannamalai deepam festival restriction for out side people

 

கரோனா பரவல் காரணமாக மத்திய – மாநில அரசுகளின் விதிமுறைகளின்படி பெரிய திருவிழாக்கள், அரசியல் பொதுக்கூட்டங்கள் நடத்துவதற்குத் தடையுள்ளது.


திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் கார்த்திகை தீபத்திருவிழா மிகவும் புகழ்பெற்றது. இந்தத் திருவிழா 13 நாட்கள் நடைபெறும். இதற்கு முதல் நாள் ஆயிரக்கணக்கில் வரும் பக்தர்கள், பெரிய தேர் மற்றும் மகாதீபத்தன்று லட்சக்கணக்கில் வருவார்கள். வெளியூர், வெளிமாவட்டம், வெளிமாநிலங்களில் இருந்து வரும் பக்தர்களால் கரோனா பரவும் அபாயம் ஏற்படும் எனக் கோவிலுக்குள்ளேயே சிமபிளாக திருவிழாவை நடத்த முடிவு செய்து அதன்படி நடந்துவருகிறது.


இந்நிலையில், திருவண்ணாமலை மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் ஓர் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதில், வரும் 27, 28, 29 ஆம் தேதிகளில், திருவண்ணாமலை நகருக்கு வெளிமாவட்ட பக்தர்கள் யாரும் வர அனுமதியில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. திருவண்ணாமலை நகர மக்கள் வெளியூரில் இருந்து வந்தால் இங்கு வசிப்பதற்கான அடையாள அட்டை ஒன்றைக் காட்டினால் மட்டுமே நகருக்குள் அனுமதிக்கப்படுவர் எனவும் அந்த அறிவிப்பில் சொல்லப்பட்டுள்ளது.


அதேபோல் 26ஆம் தேதிக்குப் பின்னர் நகரத்தில் திருமண மண்டபங்கள், தங்கும் விடுதிகள், மடங்களில் யாரும் தங்கவைக்கவோ, நிகழ்ச்சிகள் நடத்தவோ அனுமதியில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தடை 29ஆம் தேதி நள்ளிரவு வரை அமலில் இருக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.  


திருவண்ணாமலை நகரம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதி மக்கள் வீடுகளில் இருந்தே மலையில் ஏற்றும் தீபத்தைக் காண வேண்டும் என்றும், தொலைக்காட்சிகளில் நேரடி ஒளிப்பரப்பு செய்யப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், பௌர்ணமி, மகாதீபம் உட்பட 3 நாட்கள் கிரிவலம் வரவும் தடை விதிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

 

சார்ந்த செய்திகள்