Skip to main content

விபத்தில் காயமடைந்தவரை கொண்டு செல்ல ஆம்புலன்ஸ் இல்லை... தாயின் மடியிலேயே மகன் உயிர் போன பரிதாபம்!!

Published on 10/09/2020 | Edited on 10/09/2020

 

 There is no ambulance to take the injured in the accident

 

 

தனியார் பால் ஏற்றிச்சென்ற வாகனம் மோதி மோட்டார் சைக்கிளில் சென்ற கொத்தனார் படுகாயமடைந்தார். ஆம்புலன்ஸ் கிடைக்காததால் விபத்து ஏற்படுத்திய வாகனத்திலேயே காயமடைந்தவரை சிகிச்சைக்கு ஏற்றிச்சென்றனர். மேல் சிகிச்சைக்கு செல்லும்போது தாயின் மடியிலேயே மகன் உயிர்பிரிந்த சம்பவம் மேலும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அருகில் உள்ள குளமங்கலம் வடக்கு தொண்டைமான் நகர் பகுதியை சேர்ந்தவர் ராஜா என்பவரின் மகன் ராஜமான் (வயது 22). இவர் கொத்தனார் வேலை செய்துவருகிறார். புதன்கிழமை மதியம் கீரமங்கலம் வடக்கு பகுதியில் ஒரு வீட்டில் வேலை செய்த ராஜமான் கடைவீதிக்கு செல்ல ஒரு மோட்டார் சைக்கிளில் சென்றபோது நகரம் சன்னதி பிரிவு சாலையிலிருந்து பிரதான சாலையை கடக்க முயன்றபோது கீரமங்கலத்தில் இருந்து கைகாட்டி நோக்கிச்சென்ற தனியார் பால் வாகனம் எதிர்பாராதவிதமாக ராஜமான் வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதிய விபத்தில் ராஜமான் படுகாயமடைந்தார்.

 

விபத்தில் காயமடைந்த ராஜமானை அக்கம்பக்கத்தினர் மீட்டு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்ல ஆம்புலன்ஸ் கிடைக்காததால் விபத்து ஏற்படுத்திய வாகனத்திலேயே அதன் ஓட்டுனர் மணிகண்டன், காயமடைந்து உயிருக்கு போராடிய ராஜமானை ஏற்றி கீரமங்கலம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றார். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின், மேல் சிகிச்சைக்காக அறந்தாங்கி அரசு மருத்துவமனைக்கு  அனுப்புவதற்கு மீண்டும் ஆம்புலன்ஸ் இல்லாமல், ஒரு தனியார் காரில் ஏற்றி அறந்தாங்கி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

 

விபத்து குறித்த  தகவல் அறிந்து கதறிக்கொண்டு வந்த அவரது தாயார் மடியில் படுக்க வைத்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் ராஜமான் உயிரிழந்தார். தாய் மடியிலேயே மகன் உயிரிழந்த சம்பவம் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியது. சம்பவம் குறித்து கீரமங்கலம் போலீசார் வழக்கு பதிவுசெய்து விபத்து ஏற்படுத்திய வாகனத்தை ஓட்டி வந்த தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அருகில் உள்ள ஆத்தாளூர் கிராமத்தைச் சேர்ந்த ராமகிருஷ்ணன் மகன் மணிகண்டன் (வயது 22) என்பவரை கைது செய்து விசாரனை செய்தனர்.

 

கீரமங்கலம் பகுதி மக்களின் சேவைக்காக நிறுத்தப்பட்டிருந்த 108 ஆம்புலன்ஸ் கடந்த சில மாதங்களாக கரோனா பணிக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதால் விபத்துகள் ஏற்பட்டால் அவசரத்திற்கு ஆம்புலன்ஸ் கிடைக்காமல் தனியார் வாகனங்களை பொதுமக்கள் ஏற்பாடுகள் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. அதனால், கரோனா பணிக்காக அனுப்பப்பட்டுள்ள ஆம்புலன்ஸுக்கு பதிலாக மாற்று ஆம்புலன்ஸ்கள் ஏற்பாடுகள் செய்ய வேண்டும் என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள்.

 

 

சார்ந்த செய்திகள்