Skip to main content

முதல்வர் படம் பொறித்த பைகளில் பணமா..? கண்டெய்னரால் பரபரப்பு..!

Published on 05/03/2021 | Edited on 05/03/2021

 

Is there money in the bags with the picture of the Chief Minister? Container


தமிழகத்தில் 2021ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு, தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளது. அரசியல் கட்சிகளும் கூட்டணி, தொகுதிப் பங்கீடு, வேட்பாளர் நேர்காணல் என தீவிரமாக இயங்கி வருகின்றன. இந்நிலையில் திமுக கூட்டணியில், திமுகவுக்கும் அதன் கூட்டணிக் கட்சிகளுக்குமான தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இது ஒருபக்கம் இருக்க, மறுபக்கம் தேர்தல் நடத்தை வழிமுறைகள் அமலில் இருப்பதால், தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

 

இந்நிலையில், நேற்று (04.03.2021) காலை தஞ்சை பழைய ஆட்சியர் அலுவலகம் முன்பு வெகுநேரமாக ஒரு கண்டெய்னர் லாரி நின்றிருந்தது. அதனைத் தேர்தல் பறக்கும் படையினர் சோதனை செய்தனர். அப்போது அதில், பல ஆயிரத்திற்கும் மேற்பட்ட, முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஆகியோர் படம் பொறித்த, பள்ளிப் பைகள் இருப்பது தெரியவந்தது. உடனடியாக பறக்கும் படையினர் ஆவணங்களை வாங்கி பார்த்தனர். தமிழக அரசால் மாணவர்களுக்கு வழங்கும் இலவச பாடப் புத்தகப் பைகள் எனத் தெரியவந்தது. அதனைத் தொடர்ந்து அந்த வாகனத்தைப் பழைய ஆட்சியர் அலுவலகத்திற்குள் செல்ல அனுமதி அளித்தனர். 

 

ஆனால், அதற்குள் அங்கு கூடியிருந்த திமுகவினர், ‘அனைத்து பைகளையும் பிரித்துப் பார்த்து சோதனையிட்ட பின்னரே எடுத்துச் செல்ல அனுமதிக்க முடியும். காரணம், உள்ளே பணம் இருக்கலாம் என்ற சந்தேகம் எங்களுக்கு உள்ளது’ என்று தெரிவித்தனர். அதனைத் தொடர்ந்து காவல்துறையினர் மற்றும் பறக்கும் படையினர், லாரியில் இருந்த புத்தகப் பைகளை இறக்கி திமுகவினர் முன்னிலையில் பிரித்து சோதனை செய்து, அதன் பின் ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள ஒரு அறையில் அந்த புத்தகப் பைகள் அடுக்கிவைக்கப்பட்டன. 

 

 

சார்ந்த செய்திகள்